நாளைக்கு ஒழுங்கா பணியாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு கொடுங்க- தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்

 

நாளைக்கு ஒழுங்கா பணியாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு கொடுங்க- தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் வாக்குப்பதிவு அன்று சம்பளத்துடன் கட்டாய லீவுவை கடைப்பிடிப்பதில் விலக்கு அளிக்கும்படி வேண்டிய 63 நிறுவனங்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

பொதுவாக தேர்தல் வாக்குப்பதிவு அன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் அன்று பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கட்டாய லீவு விட வேண்டும் என்பதில் விலக்கு அளிக்கும்படி மும்பையை சேர்ந்த 65 நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன.

இந்திய தேர்தல் ஆணையம்

கோரிக்கைகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் 63 நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. அதேசமயம்  2 நிறுவனங்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப்பதிவு நடைபெறும் அக்டோபர் 21ம் தேதியன்று மும்பையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் மூட வேண்டும். பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

மகாராஷ்டிரா தேர்தல்

அதேசமயம் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளுக்காக  மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட தேர்தல் ரிட்டர்னிங் அதிகாரி ஒப்புதலுடன் சில நிறுவனங்கள் திறந்து கொள்ளலாம். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 2 நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பணியாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துவி்ட்டார்களா என்பதை நிறுவனங்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு ஓட்டளிக்க குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.