நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி இடமாற்றம்; ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

 

நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி இடமாற்றம்; ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்திருந்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

jacto geo

ஆசிரியர்களின் இந்த போராட்டம் நீடித்தால், தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளியை நடத்துவோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்காக பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அரசு ஊழியர்களின் இந்த போராட்டமானது, 6-வது நாளாக நீடித்து வருகிறது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஒருவேளை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.