நாளுக்கு நாள் மோசமாகும் நிலவரம்……சம்பளம் போட உடனடியா நிதியுதவி செய்யுங்க…. ஏர் இந்தியா பைலட் சங்கங்கள் மத்திய அரசுக்கு கடிதம்

 

நாளுக்கு நாள் மோசமாகும் நிலவரம்……சம்பளம் போட உடனடியா நிதியுதவி செய்யுங்க…. ஏர் இந்தியா பைலட் சங்கங்கள் மத்திய அரசுக்கு கடிதம்

ஏர் இந்தியா பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய உடனடியாக நிதியுதவி வழங்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு அந்நிறுவனத்தின் 2 விமான பைலட் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தள்ளாடி வருகிறது. மேலும் அந்நிறுவனத்தின நிதி நிலவரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மேலும் ஏர் இந்தியாவை வைத்திருந்தால் யானை கட்டி சோறு போட்ட கதையாகி விடும் என பயந்து போன மத்திய அரசு அதனை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கி விட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏர் இந்தியாவை கை கழுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

ஏர் இந்தியா விமானிகள்

அதேசமயம், ஏர் இந்தியாவின் நிலைமை தற்போது நாளுக்கு நாள் மோசமாகி வருவது போல் தெரிகிறது. பணியாளர்களுக்கு சம்பளம சரியாக போடக்கூட முடியாமல் அந்நிறுவனம் தடுமாறி வருவதாக தகவல். இந்நிலையில் ஏர் இந்தியாவின் இந்திய வர்த்தக பைலட்ஸ் சங்கம் மற்றும் இந்திய பைலட்ஸ் கில்ட் ஆகிய 2 சங்கங்களும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

அந்த கடிதத்தில், பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் மற்றும் இதர தவணைகளை வழங்குவதை உறுதி செய்ய ஏர் இந்தியாவுக்கு அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும். மேலும் கடந்த ஜனவரி மாத சம்பளத்தை கூட ஏர் இந்தியா பணியாளர்கள் இன்னும் முழுமையாக வாங்கவில்லை. தொடர்ச்சியாக ஊதியம் வழங்குவது தாமதாகி வருவதால் பணியாளர்களும் அவர்களது குடும்பங்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என பல முக்கிய விஷயங்களை அதில் குறிப்பிட்டுள்ளனர்.