“நான் ஒரு மதவாதி இல்லை” என்று சொல்லியிருக்கிறீர்களே சிரிப்பு வரவில்லையா? நாராயணன் திருப்பதிக்கு இயக்குநர் அமீர் பதிலடி!

 

“நான் ஒரு மதவாதி இல்லை” என்று சொல்லியிருக்கிறீர்களே சிரிப்பு வரவில்லையா?  நாராயணன் திருப்பதிக்கு  இயக்குநர் அமீர் பதிலடி!

போலிமதச்சார்பின்மை ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசமாக்கும்.  இதை அறிந்தவர்கள் அறிவாளிகள்” என்று குறிப்பிட்டுள்ளார் இருந்தார்

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவ  டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் தான் காரணம் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். 

இதையடுத்து இவர் நேற்று தனது தனது டிவிட்டர் பக்கத்தில், “கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், ‘ஊநீர்’ தானம் செய்ய வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை வாழ்த்த, நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நான் மதவாதியும் அல்ல போலிமதச்சார்பின்மை பேசுபவனும்  அல்ல. ஒருவரின் மதநம்பிக்கை வாழ்வை மேம்படுத்தும். அடிப்படைவாதம் வாழ்வை சீரழிக்கும். போலிமதச்சார்பின்மை ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசமாக்கும்.  இதை அறிந்தவர்கள் அறிவாளிகள்” என்று குறிப்பிட்டுள்ளார் இருந்தார். 

tt

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநரும் நடிகருமான அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான் வேதம் சொன்னது போல் திரு.நாராயணன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு மடல், சரி சொன்னது வேதமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று பார்த்தால் வேதத்தின் முகப்பக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு உள்ளே முழுவதுமாக சாத்தானிய கருத்துக்களே நிரம்பி வழிகிறது. 

வார்த்தைகளிளில் நச்சுக் கருத்தை விதையாக வைத்து பேசும் வழமை கொண்ட நாராயணன் இன்று சமூக நீதி சிந்தனையாளர் போல் தன்னை காட்டிக்கொள்வது காலத்தின் வெற்றி தான். தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் மட்டுமல்ல சாதாரணமாகவே ஒரு விவாதம் என்று எடுத்துக்கொண்டாலே யாரோ ஒருவர் கேட்கும் கேள்விக்கு இதை முஸ்லீம்களிடம் கேட்பீர்களா? என்கிற தோரணையில் பேசும் இவர், இந்துக்கடவுள்கள் இந்துக்களால் விமர்சிக்கப்பட்டால் இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை இப்படிச் சொல்வீர்களா? என்று கேலி செய்யும் இவரின் அத்தனை உரைகளிலும் அத்தனை விவாதங்களிலும் நேரடித் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் பற்றி பேசாத காணொளி ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்று நாம் வலை வீசித் தேடினாலும் நமக்குக் கிடைக்காது என்பதே மறுக்க முடியாத உண்மை. வடநாட்டில் பரவிக்கிடக்கும் மதவெறி தொற்று நோயை கடந்த ஆறு வருடமாக தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பரவச் செய்ததோடு மட்டுமல்லாமல் சமூகநீதியையும் கேள்விக்குறியாக்கிய வேலையை திறம்படச்செய்த கூட்டத்தினரில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் இவர் தான் இன்றைக்கு கொஞ்சமாக கிருமி நாசினி தெளிக்கிறார் நம்புவோமாக இவர் நல்லவரென்று!!. ஆனல் அதுவும் கிருமி நாசினி இல்லையே என்செய்வது?

 

இன்றைக்கும் கூட தப்லீக்ஜமாத்தினரால் தான் தமிழகத்தில் தொற்று பரவியது என்ற பொய்யான கருத்தை மீண்டும் உறுதி செய்தே இந்த மடலையும் துவங்குகிறார். இவரால் இஸ்லாமிய வெறுப்பு இல்லாமல் மூச்சு கூட விட முடியாது என்பதற்கு இதுவே சான்று.மேலும் “பிளாஸ்மா தெரபி” சிகிச்சைக்கு உதவ இஸ்லாமியர்கள் தாமாகவே முன்வந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோமா? என மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்!? மதியை அடகுவைத்து மதத்தை முன் நிறுத்திப் பேசும் மடையர்களைத் தவிர மனிதத்தை போற்றும் அனைவரும் ஏற்கனவே இந்த தகவலை அறிந்திருக்கின்றனர் என்பதை பாவம் இவர் அறியவில்லை போலும். அடுத்ததாக தன்னை ஒரு மருத்துவராக மாற்றிக்கொண்டு “பிளாஸ்மா தெரபி” குறித்து நமக்கெல்லாம் பாடம் நடத்துகிறார். ( இவர்கள்தான் இடத்திற்கு தகுந்தாற் போல் தங்களது தொழிலையும் நிறத்தையும் மாற்றுவது இயல்பு தானே அது போல இப்போது ஊநீர் சிகிச்சை பாடம் நடத்துகிறார் ) இந்தப் பாடம் எல்லாம் ஏற்கனவே மருத்துவர்களால் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்பதை அறியாமலே!  ( ஊநீர் சிகிச்சை மூலமாவது கொரோனா ஒழிய வேண்டும் என்பதே நம் அனைவருடைய வேண்டுதலாக இருக்கட்டும் ).
ஊநீர் சிகிச்சைக்கு உதவ முன்வந்த முஸ்லீம்களை மேலும் கொச்சைப் படுத்தும் விதமாக அவர்கள் நோயிலிருந்து சிகிச்சை பெற்றவர்கள் அதனால் தான் அவர்களிடமிருந்து அந்த ஊநீரை பெற முயல்கிறோம் அதைத்தவிர வேறு ஒன்றும் அதில் விசேஷம் எதுவுமில்லை என்று நம் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்துகிறார் நீங்கள் யாரும் இஸ்லாமியர்கள் மீது நல்லெண்ணம் கொண்டுவிடக்கூடாது என்பதற்காக. பழையபடி “இந்து முஸ்லீம் பாய் பாய்” என்று நீங்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த விஷயத்தைக் கவணமாகக் கையாளுகிறார்.

நாராயணனே, உங்கள் பீலாவால் தான் தினமும் பல்வேறு தரப்பினர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக சொல்லப்பட்டதே அவர்களிடம் ஊநீரை பெற்றீர்களா? அல்லது அவர்களாகவே ஊநீர் சிகிச்சைக்கு உதவ முன்வந்தனரா?  உங்கள் சூழ்ச்சிப் பேச்சுக்களில் உள்ள உள்ளார்ந்த அர்த்தம் எங்களுக்கு புரியாது என்று நினைத்து விட்டீர்களா? இதில் “ஊநீரைத் தானம் செய்ய முன்வந்தவர்களுக்கு பாராட்டும் நன்றிகளும்”   சொல்கிறாராம் இவர். கொல்லப்பட்டவன் வீட்டிற்குச் சென்று கொன்றவனே மலர்வளையம் வைத்து கைச்செலவுக்கு பணம் கொடுக்கும் கதை தான் இது. இந்த தேசத்தின் அசல் வித்தாக இருக்கக்கூடிய எவரும் மனித நேயம் மிக்க எவரும் உண்மையான இறை நம்பிக்கையுள்ள எவரும் செய்யக்கூடிய அவசியம் செய்ய வேண்டிய செயல் தான் ஊநீர் தானம் என்பது.  உங்களின் பாராட்டையோ நன்றியையோ எதிர்பார்த்து இங்கு யாரும் இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தன்னலமற்று பொதுத் தொண்டு செய்ய முன் வந்தவர்களை உங்களின் பாராட்டு மூலம் கொச்சைப் படுத்திவிடாதீர்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊநீர் தானத்திற்கு முன் வந்தாலும் தயவு செய்து நீங்கள் பாராட்டிவிடாதீர்கள். உங்கள் பாராட்டைவிட இழிவான தண்டனை அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.பேரிடர் காலங்களில் இஸ்லாமிய சமூகம் எந்த மாதிரியாக பணி செய்யும் என்பதை பிற சமூகத்தினர் தெரிந்தே வைத்துள்ளனர். உடன் பிறந்தார் போல் உள்ள இந்துச் சமூகம் மற்றும் கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகமும் இங்கே தேவைப்படும் காலங்களில் எப்படி கூட்டுப் பணியாற்றுவது என்பதையும்  நன்றாகவே புரிந்து வைத்திருந்தனர் அதன் படியே செயல்பட்டும் வந்தனர். ஆனால் இன்றைக்கு தங்களைப் போன்றவர்கள் அந்தக் குட்டையிலும் பாசிசக் கல்எறிந்து கலங்கச் செய்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். 

கொரோனா தொற்று விவகாரத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு அள்ளி வீசப்பட்டதாகவும் அதனால் அவர்கள் மனம் புண்பட்டிருப்பதாகவும் இந்த ஊநீர் தானத்தின் அடிப்படையில் அதை மாற்றியமைக்க முடியும் என இஸ்லாமியர்களே நம்புவதாகவும் அதை அவர்களே சொன்னது இங்கே  குறிப்பிடத்தக்கது என்று நாராயணன் எடுத்துரைத்திருக்கிறார். 
உலகமே கொரோனாவில் இருந்த போது இவர் மட்டும் கோமாவில் இருந்தார் போல? இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை அள்ளி வீசியது, மனம் புண்படும் படி பேசியது, அவர்களை குற்றச்சமூகமாக ஆக்கியது பொது வெளியில் விவாதப் பொருளாக மாற்றியது அனைத்தும் நீங்களும் உங்கள் கூட்டத்தாரும்தான் என்பதை மறந்துவிட்டீர்களா? அல்லது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் விதைத்தது தமிழகத்தில் என்ன மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தியது என்பதையும் மறந்துவிட்டீர்களா? 
பிரசவம் உள்ளிட்ட மற்ற எந்த மருத்துவ சிகிச்சைக்கும் மருத்துவமனையை அணுக முடியாமல் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தியது, ஒரே ஊரில் ரேசன் பொருட்கள் வாங்கச் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புச் சுவர்கள் அமைத்தது 
இறைச்சிக்கடை வாசலில் நின்றிருந்த முஸ்லீம் முதியவரை காவல்துறை அடித்தே கொன்றது உள்ளிட்ட எண்ணற்ற செயல்களை செய்ய வைத்து சமூக இடைவெளியை மத இடைவெளியாக மாற்றிய பெருமை உங்களுக்கும் உங்கள் கூட்டத்தாருக்குமே சேரும்.

tt

நாங்கள் தப்லீக் ஜமாத் மாநாடு குறித்தோ அல்லது அங்கு சென்றது குறித்தோ விமர்சனம் செய்யவில்லை என்று வாய்கூசாமல் பொய் பேசுகிறீர்களே, தொடக்க காலத்தில் நீங்கள் பேசிய விஷக்கருத்துகள் உங்களுக்கு மறந்துவிட்டதா?  பழையவைகள் சில உங்களுக்கு மீண்டும் ஞாபகம் வர வேண்டுமானால் நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள். நீங்கள் வீட்டிலிருந்த படியே கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாதங்களையும், உங்கள் தலையங்கத்தில் நீங்கள் நடத்திய தனிஆவர்த்தனத்தையும் இதே நெஞ்சுக்குநீதியில் நீங்கள் உமிழ்ந்ததையும் மீண்டும் ஒரு முறை கேட்டும் படித்தும் பாருங்கள். அப்போது உங்களுக்கு பழைய நினைவுகள் மீண்டுவர நிறைய வாயப்பு இருக்கிறது. மேலும் டெல்லி சென்ற தப்லீக் ஜமாஅத்தினர் தாமாக முன்வந்து சிகிச்சைக்கு தயாராகவில்லை என்பதே விமர்சனமாக்கப்பட்டது  என்று சொல்கிறீர்களே? பின் டெல்லி சென்றவர்களை காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையின் மூலமாக கண்ணி வைத்தா பிடித்தார்கள்? தமிழக அரசும் அமைச்சரும் பத்திரிக்கையாளர்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரே நாளில் அத்தனை பேரும் சிகிச்சைக்குத் தயாரானார்கள் என்று உங்கள் பீலா சொன்னாரே அது அத்தனையும் உண்மைக்கு புறம்பானதா? அல்லது உங்களுக்கு ஏற்பட்ட கோமாவினால் அது மறந்துவிட்டதா ??

எப்போது கேட்டாலும் நாங்கள் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் குற்றம்சொல்லவில்லை என்று ஒரு சப்பையான வாதத்தை முன் வைக்கிறீர்களே? முதலில் நீங்கள் யார்? ஒரு பாசிச கட்சியின் அடிப்படை உறுப்பினர் அவ்வளவு தானே?  ஏதோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி போல் உங்களை பொதுவெளியில் காட்டிக்கொள்வது ஏன்? உங்களுக்கென்று ஒரு தனித்த அடையாளம் இந்த சமூகத்தில் என்ன இருக்கிறது என்று உங்களால் உரக்கச் சொல்ல முடியுமா? என்றைக்காவது ஒரு நாள் ஏதாவது ஒரு நேரத்தில் நீங்கள் வாழுகின்ற இந்த தமிழ்ச் சமூகத்தில்  மாநில சுயாட்சி முதல் ஜல்லிக்கட்டு, நீட், நியுட்ரினோ, மீத்தேன், கூடங்குளம், ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, முல்லைப் பெரியார், காவேரி, ஈழப்பிரச்சனை, மீனவர் படுகொலை, எழுவர் விடுதலை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் என்றைக்காவது மக்களின் குரலாக பேசியிருக்கிறீர்களா? அல்லது பேரிடர் காலங்களான சுனாமி, ஒக்கி, தானே, வர்தா புயல் போன்றவை ஏற்பட்ட போதோ அல்லது சென்னை பெருவெள்ளத்தின் போதோ மக்களோடு மக்களாக களத்தில் நின்றிருக்கிறீர்களா? உதவிகள் ஏதேனும் செய்திருக்கிறீர்களா? நன்றாக யோசித்துப் பாருங்கள் அந்தந்த காலகட்டங்களில் காவிச் சட்டையை மாட்டிக்கொண்டு தொலைக்காட்சிகளில் கத்திக்கொண்டிருந்ததைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்யவில்லை. (ஆண்டாள் பிரச்சனை தவிர வேறு எப்போதும் பொதுவெளியில் நான் உங்களைக் கண்டதே இல்லை.)  நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு என்றைக்காவது ஒரு நாளாவது உண்மையாக இருந்திருக்கிறீர்களா? அல்லது மானுட சமூகத்தைத் தான் நேசித்திருக்கிறீர்களா? 

உங்கள் மடலில் உச்சக்கட்டமாக “நான் ஒரு மதவாதி இல்லை” என்று சொல்லியிருக்கிறீர்களே இதைக்கேட்டவுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு சிரிப்பு வரவில்லையா? அல்லது நீங்களே கண்ணாடி முன் நின்று பார்க்கும் போது உங்களுக்கே உங்களைப் பார்க்க சங்கடமாக இருக்காதா? உங்கள் மனசாட்சி உங்களை ஒரு நாள் கூட கேள்வி கேட்டதே இல்லையா? அல்லது இது ஏதோ ஒரு குரூப்பில் பதிவிடுவது தானே இதையெல்லாம் வேறு யார் பார்க்கப்போகிறார்கள் என்கிற தைரியத்தில் சொல்லிவிட்டீர்களா? அடிப்படையில் நான் ஒரு RSSகாரன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை மறந்து விட்டீர்கள் போலும். உங்களின் மீது அக்கறை கொண்டவன் என்கிற முறையில் சொல்லுகிறேன் நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையென்றால் உங்கள் தேசியத் தலைவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது போல உங்களுக்கும் ஒருநாள் நேரிடும்.

“மேலும் போலி மதச்சார்பின்மை பேசுபவன் நான் அல்ல” என்று சொல்லியிருக்கிறீர்கள், போலி மதசார்பின்மையை உலகிற்கு கற்றுக் கொடுத்தவர்களே நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் தான் என்பதை மறந்துவிட்டீர்களா? அதற்காகத்தான் பாஜக என்கிற கட்சியே உருவாக்கப்பட்டது என்றும் அதில் சிறுபான்மை பிரிவு உருவாக்கப்பட்டதையும் நான் சொல்லித் தான் நீங்கள் அறியவேண்டுமா? முத்தலாக் முதல் CAA வரை உங்கள் அத்தனை கரிசனங்களையும் நாங்கள் தொடர்ந்து கவணித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

“ஒருவரின் மதநம்பிக்கை வாழ்வை மேம்படுத்தும் அடிப்படை வாதம் வாழ்வை சீரழிக்கும்” என்கிற மகான்களின் தத்துவத்தை உங்களைப் போன்றவர்கள் பயன்படுத்துவது மிகவும் பேராபத்தானது. அது போன்ற வாசகங்களை எல்லாம் பொது வெளியில் பயன்படுத்துவதற்கோ நடைமுறைப்படுத்துவதற்கோ நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் கொஞ்சமும் தகுதியற்றவர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? அல்லது காலம் உங்களை அப்படிச் சொல்ல வைக்கிறதா? கொரோனா வைரஸை முதலில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக்கினீர்கள் பின்பு அதற்கு இஸ்லாமிய மத சான்றிதழை வழங்கினீர்கள் இப்போது கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் சீனாவில் இருந்து பரிசோதனைக் கருவி வந்து கொண்டிருக்கிறது என்று டுவிட் செய்கிறீர்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று பாரதப் பிரதமரும் நீங்களும் தொற்று நோய்க்கு மதம் சாதி இனம் மொழி கிடையாது என்று திடீரென்று முழங்குகிறீர்கள் நன்றி பாராட்டுகிறீர்கள். 
பார்த்தீர்களா! தான் எவ்வளவு வலிமையானவன் என்பதை வெகு சீக்கிரத்தில் உங்களைப் போன்றவர்களை உணர வைத்திருக்கின்ற காலத்திற்கும் அதை கட்டுக்குள் வைத்திருக்கும் கடவுளுக்கும் என்னைப் போன்றவர்கள் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். 

tt

 
“போலி மதச்சார்பின்மை ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசமாக்கும்” என்கிற அரிய உயரிய தத்துவத்தை இப்போது ஏன் நாராயணன் அவர்களே தேவையில்லாமல்  பொது வெளியில் உதிர்க்கிறீர்கள்? அய்யோ அய்யோ….. அதை உங்கள் கருத்தாய் கேட்பது தான் கொடுமையிலும் கொடுமை.
உங்கள் கூட்டத்தினர் பாபர் மசூதியை இடித்த போதும், குஜராத் கலவரத்தின் போது கர்ப்பினி பெண்ணின் வயிற்றை சூலாயுதத்தால் கிழித்து சிசுவை வெளியேற்றி  உயிர்ப்பலி வாங்கிய போதும், ஜெய்ஶ்ரீராம் சொல்லாத இஸ்லாமியனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றபோதும், ரயிலில் பயணம் சென்ற சிறுவனை உடன்பிறந்த சகோதரனின் கண்முன்னே கொன்று சிதைத்த போதும், அனுமதிச் சீட்டு வைத்திருந்த பெரியவரை மாட்டிறைச்சி காரணம் காட்டி நடுரோட்டில் பிணமாக்கியபோதும், எட்டுவயது சிறுமியை கோவில் கருவறையில் வைத்து கூட்டு வன்புணர்ச்சி செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த பிஞ்சுக்குழந்தையை இந்த உலகத்தைவிட்டே அனுப்பியபோதும் அதற்கு ஆதரவாக அதிகாரத்தில் இருக்கக்கூடிய உங்கள் எம்எல்ஏக்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் போனபோதும் தாழ்த்தப்பட்ட ஒருவன் குதிரையில் ஏறியதற்காக அவனைக் கொன்று குவித்தபோதும், பொய்யான “லவ் ஜிஹாத்” தை காரணம் காட்டி நடுவயதினர் ஒருவரை தந்தையும் மகனும் உயிரோடு எரித்து அதை வீடியோ எடுத்து வெளியிட்ட போதும், ஒடுக்கப்பட்ட  ஆண், பெண் இருவரையும் நிர்வாணமாக்கி அவர்களை ஒருவரை ஒருவர் தலையில் சுமந்து செல்லச் சொல்லி அதன் பின்னே உங்கள் கூட்டத்தினர் மலர்ந்த முகத்துடன் பாரத் மாதா கீ ஜே என்று முழங்கிச் சென்ற போதும், கவுரிலங்கேஷ், கல்புர்கி போன்ற எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், பெற்ற மகளைக் கெடுத்தவன் மீது புகார் கொடுக்கச் சென்ற தந்தையை காவல்நிலையத்தில் வைத்து கொன்ற போதும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் பொது வெளியில் வந்து மக்கள் முன் மன்றாடி “இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்” என்று கதறிய போதும், மசூதி இடித்த இடத்தில் ராமர்கோவிலைக் கட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீங்கள் பயன்படுத்திய விதத்தை பார்த்த போதும்……………..( யப்பா எழுதி முடியலப்பா கை வலிக்குது )   இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்தபோதே இந்த நாடு நாசமாகிவிட்டது என்று எங்களுக்கெல்லாம் தெரிந்துவிட்டதே இனிமேல் புதிதாக நாசமாவதற்கு என்ன மிச்சம் வைத்திருக்கிறீர்கள். ஏற்கனவே அதைச் சிறப்பாக செய்து முடித்தவர்கள் தங்கள் கூட்டத்தார் தான் என்றும் பலமுறை புகைப்படங்களின் மூலமும் பேட்டிகளின் மூலமும் எங்களுக்குச் சொல்லியிருக்கிறீர்களே பிறகு ஏன் அதை மீண்டும் மீண்டும் இப்போது நினைவு படுத்தி எங்கள் வேதனையை சுமக்கிறீர்கள்!

இறுதியாக இதை அறிந்தவர்கள் அறிவாளிகள் என்று வரலாற்று உண்மையை மக்களின் முன் உரை நிகழ்த்தியிருக்கிறீர்களே திரு. நாராயணன் அவர்களே, நீங்கள் யார், உங்கள் கூட்டத்தினர் யார், நீங்கள் என்ன மாதிரியாகப் பேசுவீர்கள், எந்த நேரத்தில் எதை வெளிப்படுத்துவீர்கள், உங்கள் தேவைக்கு யாரையெல்லாம் எந்த மாதிரியாக பயன்படுத்திக்கொள்வீர்கள், யாரிடம் பலத்தை பிரயோகப்படுத்துவீர்கள், யாரிடம் மண்டியிடுவீர்கள். தேவைப்படும் போது தங்களைத் தவிர பிறரை பலி கொடுக்கவும் தயங்கமாட்டீர்கள் என்றும்  நேற்றைக்கு உங்களோடு இருந்தவர்கள் இன்றைக்கு உங்களோடு இல்லை. இன்றைக்கு இருப்பவர்களை நாளை தூசு போல் உதறித் தள்ளிவிடுவீர்கள் என்றும், மனித சமூகத்தை ஒன்று படுத்திப் பார்க்கும் நல்எண்ணம் என்றைக்குமே உங்களுக்குத் தோண்றாது என்றும் ஒன்றுபட்டுக் கிடந்த தமிழ்ச் சமூகத்தை வன்மம் நிறைந்த சமூகமாக மாற்றி அந்தச் சூழலிலேயே அவர்களை சுழன்று கொண்டிருக்கச் செய்ய மட்டுமே உங்களால் முடியும் என்றும் தெளிவாகவும் ஆழமாகவும் அறிந்த அறிவாளிகள் நாங்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.