நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதி; முப்படைத் தளபதிகள் கூட்டாக அறிவிப்பு!

 

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதி; முப்படைத் தளபதிகள் கூட்டாக அறிவிப்பு!

நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளதாக முப்படைத் தளபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்

புதுதில்லி: நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளதாக முப்படைத் தளபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ராணுவ நிலைகளை தாக்க முனைந்தது. ஆனால், பாதுகாப்பு படையின் தகுந்த நடவடிக்கையால் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது. அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு, ஜெனீவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு மீறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தாக்குதல் மற்றும் இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்திய ராணுவத்தின் முப்படை அதிகாரிகளும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்தோம். ஆனால், விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்திய நிலைகளைக் குறி வைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இந்திய விமானம் ஒன்று துரதிர்ஷ்டவசமாக தகர்க்கப்பட்டது. இந்திய விமானி பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். பாகிஸ்தான் படைகள் இல்லாத பகுதியில் தான் அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பிறகே பாகிஸ்தான் படைகள் அவரைக் கைது செய்துள்ளன. விமானப்படை வீரர் அபிநந்தன் தற்போது ராவல் பிண்டி ராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நாளை நம்மிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. லாகூரில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி அல்லது மும்பை விமான நிலையம் வந்தடைவார்.

இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராகவுள்ளது.  நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றனர்.