நாட்டிலேயே கார்கள் நெரிசல் மிக்க நகரம் மும்பை; தில்லியை விட 5 மடங்கு அதிகம்!

 

நாட்டிலேயே கார்கள் நெரிசல் மிக்க நகரம் மும்பை; தில்லியை விட 5 மடங்கு அதிகம்!

தற்போது பெரும்பாலான வீடுகளில் ஆளுக்கு ஒரு கார் வீதம் நான்கு முதல் ஐந்து கார்கள், தவிர இருசக்கர வாகனங்களும் வைத்திருக்கிறார்கள்

மும்பை: தனியார் கார்களின் அடர்த்தி விகிதம் அதிகரித்த காரணத்தால், நாட்டிலேயே கார்கள் நெரிசல் மிக்க நகரமாக மும்பை திகழ்கிறது.

சுற்றுச்சூழல் சீர்கேட்டிலும், போக்குவரத்து நெரிசலிலும் முக்கிய பங்கு வகிப்பது மோட்டார் வாகனங்கள். முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனம் இருந்தாலே பெரிது. ஆனால், தற்போது பெரும்பாலான வீடுகளில் ஆளுக்கு ஒரு கார் வீதம் நான்கு முதல் ஐந்து கார்கள், தவிர இருசக்கர வாகனங்களும் வைத்திருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, தனியார் கார்களின் வரத்தும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பேருந்தை பிடித்து போன காலம் மலையேறிப் போய், இருந்த இடத்திலேயே ஓலா, உபர் புக் செய்து போகும் காலம் வந்து விட்டதால், தனியார் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

mumbai traffic

இந்நிலையில், தனியார் கார்களின் அடர்த்தி விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரித்த காரணத்தால், நாட்டிலேயே கார்கள் நெரிசல் மிக்க நகரமாக மும்பை திகழ்வதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மும்பையில் ஒரு கிலோ மீட்டர் சாலையில் 510 கார்கள் என்ற விகிதத்தில் அடர்த்தி நிலவுகிறது. இது, 108 கார்கள் என்ற விகிதத்தில் அடர்த்தி நிலவும் தலைநகர் தில்லியை ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாகும்.

delhi

இதற்கு அடுத்த இடங்களில் கிலோமீட்டருக்கு 359 கார்கள் என்ற விகிதத்தில் புனேவும், 319 கார்கள் என்ற விகிதத்தில் கொல்கத்தாவும், 297 கார்கள் என்ற விகிதத்தில் சென்னையும், 149 கார்கள் என்ற விகிதத்தில் பெங்களூருவும் இருப்பதாக அந்தந்த மாநில போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

delhi

தில்லியில் இருக்கும் தனியார் கார்களின் எண்ணிக்கையை விட மூன்றில் ஒரு பகுதி மும்பையில் குறைவு தான். எனினும், மும்பை நகரின் கார் அடர்த்திக்கு அங்கு நிலவும் சாலை இட பற்றாக்குறையே காரணம் எனவும், தில்லியில் 28,000 கி.மீ நீளத்துக்கு சாலை உள்ளபோது, மும்பையில் 2000 கி.மீ நீளத்துக்கு மட்டும் சாலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

mumbai roads

மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்களின் படி, வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை இட பற்றாக்குறை போன்றவை போக்குவரத்து நெரிசல், மாசு, அங்கீகாரமற்ற வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக தெரிகிறது.

mumbai

தனியார் கார்கள் கொள்முதல் மற்றும் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் இல்லையென்றால், மும்பையில் சாலை பயணம் கொடுங்கனவாக மாறி விடும் என எச்சரிக்கை விடுக்கும் போக்குவரத்து வல்லுநர் அசோக் தட்டார், போக்குவரத்துக்கு பேருந்துகளை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

மும்பையின் கார் அடர்த்தி 2016-ஆம் ஆண்டின் மத்தியில் கிலோ மீட்டருக்கு 430 கார்கள் என இருந்தது. ஆனால், தற்போது அது 510-ஆக அதிகரித்துள்ளது. நகரில் ஓடும் பதிவு செய்யப்பட்ட தனியார் கார்களின் எண்ணிக்கை 10.2 லட்சமாக உள்ளது. இது, நகரத்தின் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கையான 36 லட்சத்தில் 28 சதவீதமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

mumbai traffic

மும்பை சுற்றுச்சூழல் சமூக அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மும்பை நகரின் 49 சதவீத சாலைகளை, தனியார் கார்களே ஆக்கிரமித்துள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலுக்கு இது மிக முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

டிடிவி தினகரன் + எடப்பாடி பழனிசாமி + பாஜக + தேர்தல் ஆணையம் = சசிகலா விடுதலையும் திமுக வீழ்ச்சியும்?!