நாட்டின் அவலத்தை விளக்கும் நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்!

 

நாட்டின் அவலத்தை விளக்கும் நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்!

நாடே கொரொனா பீதியிலேயும், அரசின் ஊரடங்கு உத்தரவாலும் ஆடிப் போன நிலையில் அன்றாடங்காட்சிகளின் அவல நிலைக் குறித்து ஏகப்பட்ட வீடியோக்களும், போட்டோக்களும் வந்து கொண்டே இருக்கும் சூழலில் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் வரைந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. 

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் நடைமுறையில் உள்ளது. சொந்த மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இந்த முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும் முடக்கத்தால் நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் கைகளில் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

பொன்வண்ணன் ஓவியம்

இந்நிலையில் இயக்குநரும், குணசித்திர நடிகருமான பொன்வண்ணன்,  நாட்டை ஒருங்கிணைத்த பட்டேல் சிலைக்கீழே, ஏராளமான தொழிலாளர்கள் நடந்து செல்வது போன்று ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியம், பார்த்தவுடன் கதை சொல்லும் விதத்தில் அமைந்துள்ளது. 

குணசித்திர நடிகராகவும், வில்லன் கதாப்பாத்திரமாகவும் நாம் பார்த்த பொன்வண்ணன், உண்மையில் நல்ல ஓவியர். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றால், அறை முழுவதும் வண்ணங்களும், தூரிகைகளும், புத்தகங்களும் எள்ளி நகையாடும். ஓவியர்கள் ஜெயராஜ், மாருதி, ‘கலைமகள்’ ஜி.கே.மூர்த்தி, ராமு, கோபுலு இவர்களின் ஓவியம் என்றால் பொன்வண்ணனுக்கு மிகவும் பிடிக்கும், இவங்க எல்லாரையும் பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் ஓவியர் ஆனேன் என அவர் அடிக்கடி சொல்வதுண்டு.