நாடாளுமன்றம் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல்: அதிமுக எதிர்ப்பு

 

நாடாளுமன்றம் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல்: அதிமுக எதிர்ப்பு

டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. ஆனால், சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மட்டும் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் இரட்டை செலவு ஏற்படுகிறது.

இந்த சூழலில், மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்திருந்தார். இதையடுத்து, இதற்காக சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், இந்த திட்டத்திற்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்களில் இரண்டு கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ள அதிமுக, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலையும் நடத்தினால் 2021ஆம் ஆண்டு வரை உள்ள தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, இதனை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.