நாடாளுமன்றம் கலைப்பு? : தேர்தலை நடத்த முடியாது: இலங்கை தேர்தல் ஆணையம் அதிரடி!

 

நாடாளுமன்றம் கலைப்பு? : தேர்தலை நடத்த முடியாது: இலங்கை தேர்தல் ஆணையம் அதிரடி!

உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு: உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரணில் விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி கடந்த மாதம் 26ம் தேதி சிறிசேன உத்தரவிட்டார். தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்த அவர், நாடாளுமன்றத்தை முடக்கி அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்ததால், அந்த அறிவிப்பைத் திரும்ப பெற்றார். அதேசமயம், தான்தான் பிரதமர் என்ற அறிவித்த ரணில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து வெளியேற மறுத்தார்.

ரணிலை பிரதமராக அங்கீகரித்த அந்நாட்டுச் சபாநாயகர், கரு. ஜெயசூரியா, வரும் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும், அன்றைய தினம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், எம்பிக்கள், அணி மாறுவது, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு என்ற காட்சிகள் இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாக மாறியது. ராஜபக்ச தரப்பினர் வெளிப்படையாகவே குதிரைப்பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ரணில் தரப்பு குற்றம்சாட்டியது.

தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டிய சூழலில், ராஜபக்சவால் போதிய ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவில் நேற்றிரவு அதிபர் மைத்ரி பால சிறிசேன கையெழுத்திட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான மனுத்தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.