நவ.18ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்? பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் எதிர்க்கட்சிகள்

 

நவ.18ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்? பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் எதிர்க்கட்சிகள்

இந்த ஆண்டு சற்று முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால தொடர் பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறுவது வாடிக்கை. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முதலில் குளிர்கால கூட்டத்தொடரை எப்போது தொடங்குவது, நிறைவு செய்வது என்பது குறித்து முடிவு செய்யும். தற்போது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் தலைவராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் கூட்டம் அதன் தலைவர் ராஜ்நாத் சிங்கின் வீட்டில் நடைபெற்றது. அப்போது இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 18ம் தேதி தொடங்கவும், டிசம்பர் 3வது வாரத்தில் நிறைவு செய்யவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை சந்திப்பு நடந்த பிறகே அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இ சிகரெட்

எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிறுவன வரி குறைப்பு மற்றும் இ சிகரெட் தடை தொடர்பாக கொண்டு வந்த அவசர சட்டத்தை சட்டமாக இயற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என தெரிகிறது. அதேசமயம் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விஷயங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.