நல்ல கதையா திருடுங்கடா: சர்காருக்கு புரோமோஷன் ஸ்டார்ட் பண்ணிய ஹெச்.ராஜா-நெட்டிசன்கள் கலாய்

 

நல்ல கதையா  திருடுங்கடா: சர்காருக்கு புரோமோஷன் ஸ்டார்ட் பண்ணிய ஹெச்.ராஜா-நெட்டிசன்கள் கலாய்

நடிகர் விஜய்யின் சர்கார் படம் குறித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவையடுத்து, படத்திற்கான புரோமோஷனை ஹெச்.ராஜா ஸ்டார்ட் பண்ணிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

சென்னை: நடிகர் விஜய்யின் சர்கார் படம் குறித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவையடுத்து, படத்திற்கான புரோமோஷனை ஹெச்.ராஜா ஸ்டார்ட் பண்ணிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளி நாளான நேற்று ரிலீசாகி பாக்ஸ் ஆபீஸில் இமாலய வசூல் சாதனை படைத்துள்ளது.

முன்னதாக இப்படம் வெளியாகும் முன்னர், இத்திரைப்படத்தின் கதை செங்கோல் கதையில் இருந்து திருடப்பட்டது என சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து, நீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரம், இரு தரப்பும் சமரசமானதையடுத்து முடித்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும், கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என நடிகர் விஜய் மற்றும் சர்கார் திரைப்படம் குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நல்ல கதையா  திருடுங்கடா என சர்கார் படம் குறித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, நல்ல கதையா  திருடுங்கடா” என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜக தமிழக தலைவர் தமிழிசை, ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து எதிர்மறையான வசனங்களை நீக்காவிட்டால் படத்தின் மீது வழக்கு தொடர்வோம் என்றதும், ஜோசஃப் விஜய் என அவரது மதம் சார்ந்து அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. இதனால், படம் தாறு மாறாக கலெக்ஷனை அள்ளியது. மெர்சல் படத்துக்கு முழு புரோமஷன் செய்தது பாஜக தான் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சர்கார் படம் குறித்து நேற்று தமிழிசை கூறியதை தொடர்ந்து, ஹெச்.ராஜாவும் தற்போது விமர்சித்துள்ளதால் பாஜக-வினர் சர்கார் படத்திற்கான புரோமோஷனை ஸ்டார்ட் பண்ணிவிட்டனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.