நரேந்திர மோடி அரசுக்கு எதிரான அலை வீசுகிறது: திருமாவளவனை சந்தித்த பின் வைகோ காட்டம்

 

நரேந்திர மோடி அரசுக்கு எதிரான அலை வீசுகிறது: திருமாவளவனை சந்தித்த பின் வைகோ காட்டம்

நரேந்திர மொடிக்கு எதிரான அலை வீசுவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை: நரேந்திர மோடிக்கு எதிரான அலை வீசுவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனுக்கும் மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து மோதல்கள் நீடித்து வந்தது. இதனால், திமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர்.

இது போன்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வைகோ இல்லத்தில் அவரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திருமாவளவன் அதிக உயரம் செல்ல வேண்டியவர். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் எனக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது. வரும் காலத்தில் நாங்கள் இடம்பெறும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 

ஒரு வேளை தேர்தல் நடைபெறாமல் கூட தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள், இந்தியா முழுவதிலும் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான அலை வீசுவதை உணர்த்துகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த 5 மாநில தேர்தல் முடிவு மூலம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எழுகிறது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.