நம்ம ஊரு ரேஷன் கார்டை வைச்சு டெல்லியிலும் சர்க்கரை வாங்கலாம்.. வருதுல ‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’

 

நம்ம ஊரு ரேஷன் கார்டை வைச்சு டெல்லியிலும் சர்க்கரை வாங்கலாம்.. வருதுல ‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’

‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு உள்ளதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறினார். இந்த நடைமுறைக்கு வந்தால் நாட்டின் எந்தபகுதியில் உள்ள ரேஷன் கடையிலும் பயனாளிகள் தங்களுக்கான தானியங்களை பெற்று கொள்ளலாம்.

‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ என்ற பா.ஜ.வின் ஆசைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. இந்த நிலையில், ராம் விலாஸ் பஸ்வான் ‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி பயனாளிகள் தங்களுக்கான தானியங்களை அதாங்க அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கிக்கலாம்.

ராம் விலாஸ் பஸ்வான்

உணவு பாதுகாப்பு தொடர்பாக, மத்திய உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில் உணவு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை எப்படி திறன் பட செயல்படுத்துவது, உணவு தானியங்கள் சேமித்தல் மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து செயலாளர்களுடம் ராம் விலாஸ் பஸ்வான் விவாதம் செய்தார்.

அப்போது ராம் விலாஸ் பஸ்வான் பேசுகையில், ‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை நோக்கி மத்திய அரசு நகர்கிறது. இதன் மூலம், பொது விநியோக திட்டத்தின்கீழ், நாட்டின் எந்தபகுதியில் உள்ள ரேஷன் கடையிலும் பயனாளிகள் தங்களுக்கான தானியங்களை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தால் பிழைப்புக்காக இடம் பெயர்ந்த குடும்பங்கள் அதிக பலன் பெறுவர்.

ரேஷன் கடை

மேலும், பயனாளிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும். குறிப்பிட்ட கடையில் தான் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்காது.  இனி எந்தவொரு ரேஷன் கடை காரர்களையும் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. ஊழலும் குறைந்து விடும் என கூறியதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பொது விநியோக அமைப்பின் ஒருங்கிணைந்த நிர்வாகம் (ஐ.எம்.பி.டி.எஸ்.) செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, அந்த மாநிலங்களில் எந்த மாவட்டத்திலும் பயனாளிகள் தங்களுக்கான உணவு தானியங்களை வாங்கி கொள்ளலாம். மற்ற மாநிலங்களும் ஐ.எம்.பி.டி.எஸ். திட்டத்தை விரைவில் அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளன. இந்த நிலையில், மத்திய அரசு  ‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்தினால் பயனாளிகள் நாட்டின் எந்த பகுதியிலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற நிலை ஏற்படும்.