நடிகை ஊர்மிளா கட்சியை விட்டு விலகியதால் பொங்கிய காங்கிரஸ் தலைவர்

 

நடிகை ஊர்மிளா கட்சியை விட்டு விலகியதால் பொங்கிய காங்கிரஸ் தலைவர்

நடிகை ஊர்மிளா மடோன்கர் கட்சியை விட்டு வெளியேறியதற்கு மும்பையின் வடபகுதி தலைவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரோ தெரிவித்தார்.

ரங்கீலா பட புகழ் ஊர்மிளா மடோன்கர் கடந்த மார்ச் மாதம் காங்கிரசில் இணைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மும்பையின் வட தொகுதியில் போட்டியிட்டார். சினிமா புகழ் மற்றும் காங்கிரசின் ஒட்டு வங்கி தனக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்த்த ஊர்மிளாவுக்கு தோல்விதான் பரிசாக கிடைத்தது. 

ஊர்மிளா, ராகுல் காந்தி

இந்நிலையில் காங்கிரசில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் அந்த கட்சியை விட்டு விலகுவதாக ஊர்மிளா நேற்று அறிவித்தார். மும்பை காங்கிரசில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்து என்னால் போராட முடியாததால் கட்சியை விட்டு விலகுகிறேன் என போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மிலிந்த் தியோரா

ஊர்மிளா கட்சியை விட்டு விலகியதற்கு மும்பையின் வட பகுதி தலைவர்கள்தான் பொறுப்பு என அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், ஊர்மிளா மும்பையின் வட தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததுடன், மாநில தலைவர் என்ற முறையில் அவரது தேர்தல் பிரசாரத்தை ஆதரித்தேன். அழைத்து வரப்பட்டவர்களாலேயே அவர் கீழே தள்ளப்பட்டபோது நான் அவருக்கு ஆதரவாக இருந்தேன். ஊர்மிளா கட்சியை விட்டு விலகியதற்கு வடபகுதி தலைவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.