தொழிலாளிகளை சூறையாடிய போலீஸ்: குரோம்பேட்டையில் அராஜகம்!

 

தொழிலாளிகளை சூறையாடிய போலீஸ்: குரோம்பேட்டையில் அராஜகம்!

சென்னை: குரோம்பேட்டை ரயில்நிலைய மேம்பாலத்தில் தினசரி தொழிலாளர்கள் அமைத்திருந்த காய்கறி கடையை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர்.

சென்னை: குரோம்பேட்டை ரயில்நிலைய மேம்பாலத்தில் தினசரி தொழிலாளர்கள் அமைத்திருந்த காய்கறி கடையை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றியுள்ள சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டை ரயில்நிலைய மேம்பாலத்தில் அமைந்திருக்கும் டிக்கெட் கவுன்டர் அருகே, காய்கறி உள்ளிட்ட அன்றாட பொருட்களை வியாபாரம் செய்வதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

போலீசாரும் தங்களுக்கு வர வேண்டியது வந்தால் போதுமென்று, இத்தனை நாட்கள் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை அந்த கடைகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று அவசரப் படுத்தியுள்ள போலீஸ் அதிகாரிகள், வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, கடைகளை அப்புறப்படுத்திய போலீசார், அன்றாட கூலிக்காக வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் பொருட்களை அபகரித்துச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன் அறிவிப்பு ஏதும் இன்றி, போலீசாரின் இந்த அராஜக அடக்குமுறையினால், குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நடைமேடை வியாபாரிகள் கூறுகையில், தினம் தோறும் எங்களிடம் மாமூல் வாங்கிக்கொண்டு எங்களை தொழில் நடத்தவிடும் போலீசார், திடீரென எங்களது கடைகளை அப்புறப்படுத்தியதுடன், எங்களது பொருட்களையும் சூறையாடிச் சென்றது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.