தொழிற்சங்க ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் தொடங்கியது

 

தொழிற்சங்க ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் தொடங்கியது

மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் போராட்டம் நடைபெறுகிறது

சென்னை: மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் போராட்டம் நடைபெறுகிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனபன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து துறையினர், மருத்துவம், தொலைத் தொடர்பு துறையினர், நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நாடு முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் 20 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் வங்கி சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. ஓசூரில் தமிழக மற்றும் கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. புதுச்சேரி முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

ஓடிசாவில் உள்ள பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று, மும்பையின் பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பாரத் பந்த் நடைபெறாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். எனினும், ரயில்களை மறித்து அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. தென் மாநிங்களை விட வட மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தீவிரம் அதிகமாக உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.