தொடர் வெற்றியை தக்க வைக்குமா காளை? இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை எவை முடிவு செய்யும்?

 

தொடர் வெற்றியை தக்க வைக்குமா காளை? இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை எவை முடிவு செய்யும்?

கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் வரும் நாட்களில் வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் கணித்துள்ளனர். நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் போன்றவை வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜூன் காலாண்டின் நிதி நிலை முடிவுகளை நிறுவனங்கள் இந்த வாரம் முதல் அறிவிக்க உள்ளன. நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நிதி நிலை முடிவுகளை வைத்தே முதலீட்டாளர்கள்  மதிப்பீடு செய்வர். அதனால், பங்குச் சந்தைகளின் போக்கை நிர்ணயம் செய்வதில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் முக்கிய பங்கினை வகிக்கும்.

பங்குச் சந்தை

கடந்த மே மாத தொழில்துறை உற்பத்தி, கடந்த ஜூன் மாத  சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்கள் வரும் 12ம் தேதி வெளிவர உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் சாதகமாக இருந்தால் பங்கு வர்த்தகம் ஏற்றம் காணும். மேலும், மத்திய பட்ஜெட்டின் தாக்கம் இந்த வாரத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பங்குகளை விற்பனை செய்ததை காட்டிலும் அதிக அளவில் முதலீடு செய்தனர். அந்த மாதத்தில் மட்டும் ரூ.2,595 கோடி நிகர முதலீடு செய்து இருந்தனர். ஆனால் கடந்த வாரத்தில் இந்திய பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டில் ரூ.3,700 கோடியை விலக்கினர். அதனால் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடும் பங்கு வர்த்தகத்தின் ஏற்றஇறக்கத்தை முடிவு செய்யும் சக்தியாக இருக்கும்.

பங்கு வர்த்தகம்

இதுதவிர, இந்தவாரம் அமெரிக்காவில் நுகர்வோர் கடன், ரெட் புக்,  கச்சா எண்ணெய் கையிருப்பு, மொத்தவிற்பனை வர்த்தகம் போன்ற முக்கிய புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது. இவை சர்வதேச பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும்.