தொடர்ந்து 4வது நாளாக முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தது…………

 

தொடர்ந்து 4வது நாளாக முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தது…………

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடனே முடிவடைந்தது. சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் காலையில் சிறிய ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அதன் பிறகு பங்கு வர்த்தகத்தில் கடும் ஏற்ற இறக்கம் நிலவியது. பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல்களும் வராததால் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 

டாடா ஸ்டீல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, யெஸ் பேங்க், ஹீரோமோட்டோகார்ப், பார்தி ஏர்டெல் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. வேதாந்தா, கோடக்மகிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐ.டி.சி. மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கோடக்மகிந்திரா வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,276 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,237 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.32 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ்  7.62 புள்ளிகள் அதிகரித்து 41,681.54 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 12.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,271.80 புள்ளிகளில் முடிவுற்றது.