தொடர்ந்து 2வது மாதமாக வளர்ச்சி கண்ட முக்கிய 8 துறைகளின் உற்பத்தி….. மத்திய அரசு ஹேப்பி….

 

தொடர்ந்து 2வது மாதமாக வளர்ச்சி கண்ட முக்கிய 8 துறைகளின் உற்பத்தி….. மத்திய அரசு ஹேப்பி….

தொடர்ந்து 2வது மாதமாக கடந்த ஜனவரியிலும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கண்டது. இது மந்தநிலையிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதை வெளிப்படுத்துவதால் மத்திய அரசு நிம்மதி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரையிலான 4 மாதங்களிலும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடும் சரிவை சந்தித்தது. இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பாதைக்கு திரும்பியது. 

தொழிற்சாலை

2019 டிசம்பரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டது. தற்போது தொடர்ந்து 2வது மாதமாக கடந்த ஜனவரியிலும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது. 2020 ஜனவரி மாதத்தில் முக்கிய 8 துறைகள் 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த மாதம் நிலக்கரி, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். 2019 ஜனவரியில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 1.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது. 

ஸ்டீல் உற்பத்தி

தொடர்ந்து 2 மாதங்களாக முக்கிய 8 துறைகள் உற்பத்தி வளர்ச்சி கண்டு இருப்பது நாடு பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு வர தொடங்கியுள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும், கடந்த ஜனவரியில் முக்கிய 8 துறைகளின உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.