தொடர்ந்து 2வது நாளாக முதலீட்டாளர்கள் ஹேப்பி! சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு!

 

தொடர்ந்து 2வது நாளாக முதலீட்டாளர்கள் ஹேப்பி! சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவின் பெட்ரோலிய கையிருப்பு குறைவாக இருக்கும் என்ற கணிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு போன்ற எதிர்மறையான தகவல்கள் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

பங்கு வர்த்தகம்

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள், இந்திய பங்குகளில் அன்னிய முதலீடு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தது மற்றும் சில முன்னணி நிறுவனங்கள் குறித்து வெளியான சாதகமாக தகவல்கள் போன்றவற்றால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,440 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும், 1,051 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 168 நிறுவன பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. 

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் வேதாந்தா, பவர்கிரிட், சன்பார்மா, டாடா ஸ்டீல், யெஸ் பேங்க் உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளை இன்போசிஸ், டெக்மகிந்திரா, மாருதி, பார்தி ஏர்டெல், டி.சி.எஸ். உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,51,98,952.75 கோடியாக இருந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் சந்தை மதிப்பு ரூ.1,51,03,573.05 கோடியாக இருந்தது. ஆக இன்று பங்குச் சந்தை முதலீட்டார்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.95 ஆயிரம் கோடி லாபம் பார்த்தனர்.

ஷேர் மார்க்கெட்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 157.14 புள்ளிகள் உயர்ந்து 39,592.08 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 51.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,847.55 புள்ளிகளில் நிலை கொண்டது.