தொடரும் விமான விபத்து: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்தது இந்தியா!

 

தொடரும் விமான விபத்து: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்தது இந்தியா!

எத்தியோப்பியா விமான விபத்தில் 157 நபர்கள் இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும் இன்று முதல் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: எத்தியோப்பியா விமான விபத்தில் 157 நபர்கள் இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும் இன்று முதல் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா விமான விபத்து:

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து  கென்யா தலைநகர் நைரோபிக்கு கடந்த மார்ச் 10 ஆம் தேதி  புறப்பட்டது. 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்.

போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பறக்கத் தடை

இதனால் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பறக்கத் தடை மற்றும் விமானச் சேவை ரத்துக் குறித்துச் சம்மந்தப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களிடமும் முன்னேற்பாடு நடவடிக்கை பற்றியும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விவாதித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் 8 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமும், ஜெட் ஏர்வேஸிடம் 5 விமானங்களும் உள்ளன. 

தொடர் விபத்துகள்:

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியோனேஷியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லயன் ஏர்லைன்ஸின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அடுத்த 5 மாதத்தில் எத்தியோப்பியா விமான விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விமானத்தை இயக்க விமானிகள் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர்.

அறிவுறுத்தல்:

இந்திய அரசு முதலில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை மூத்த விமானிகளைத் தவிற வேறு யாரும் இயக்கக் கூடாது என்று திங்கட்கிழமை அறிவுறுத்தப்பட்டது.

இடைக்காலத் தடை : 

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மாலை 4 மணி முதல் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை கண்டறிந்து அதை நீக்கும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் செவ்வாய்க்கிழமை முதலே போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.