தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.

எச்.டி.எப்.சி. உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரம் நன்றாக இருந்ததால் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. அதனால் இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது.

எச்.டி.எப்.சி. நிறுவனம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் இன்போசிஸ், வேதாந்தா, எச்.டி.எப்.சி., டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் மாருதி, ஹீரோமோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐ.டி.சி. உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,431 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,151 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.36 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.09 லட்சம் கோடியாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 136.93 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு 40,301.96 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 50.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,941.30 புள்ளிகளில் முடிவுற்றது.