தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு: அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்

 

தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு: அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்

பாராளுமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம்: பாராளுமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்திய பாஜக அரசை இந்த தேர்தலில் எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மும்முரமாக இயங்கி வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசிய எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் திமுக முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சை நெருப்பை பற்றவைத்துள்ளார்.

anbumani

இந்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமகவின் தேர்தல் கூட்டணி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு தான் முடிவு செய்வோம்.

பொன்.மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி. சிலை திருட்டு வி‌ஷயத்தில் முக்கிய பிரமுகர்கள் சிக்குவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்கிறார்கள். 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் நாங்கள் சி.பி.ஐ.க்கு கேட்டபோது அரசு எதிர்த்தது.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது. இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்தவில்லை. மேகதாதுவில் அணைக் கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றது தமிழகத்திற்கு எதிரானது. டெல்டா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் முதல்வர் சட்டசபையை கூட்டி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.