தேமுதிக – திமுக கூட்டணி: திருநாவுக்கரசர் தூது?

 

தேமுதிக – திமுக கூட்டணி: திருநாவுக்கரசர் தூது?

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்.

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்.

உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சில தினங்களுக்கு முன்தான் சென்னை திரும்பினார். அவர் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் உள்ள இந்த நேரம் பார்த்து மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது.  தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்  என்பது பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்தார் விஜயகாந்த். அதனால் இந்தமுறை தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு விருப்பமில்லை என கூறப்பட்டது. அதேபோல் பாஜக சார்பாக பியூஷ் கோயல் கூட்டணிக்கு தூது வந்ததற்கு விஜயகாந்த் மசியவில்லை என தெரிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்தை சந்தித்த பின் பேட்டியளித்த திருநாவுக்கரசர், விஜயகாந்த் நலமுடன் உள்ளார், அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாட்டு நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். 

தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம். 

நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.

திமுக – காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பது குறித்துதான் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்தார்  என கூறப்படுகிறது. விஜயகாந்த் வெகுவிரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.