தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு

 

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு

தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஹைதராபாத்: தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த வகையில், ஒன்றுபட்ட ஆந்திராவை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் முதன் முதலாக ஆட்சி அமைத்த சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பதவிக்காலம் முடியும் முன்பே ஆட்சி கலைக்கப்பட்டு அங்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டன. அதில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

கஜ்வேல் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர ராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டி தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தெலங்கானாவில் நான்கில் மூன்று பங்கு இடத்தை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் அம்மாநிலத்தின் முதல்வராக நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தெலங்கானா தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமாரிடம், காங்கிரஸ் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.