தெர்மாகோல் அமைச்சருடன் அழகிரி சந்திப்பு; ஸ்டாலினுக்கு அடுத்த நெருக்கடி?

 

தெர்மாகோல் அமைச்சருடன் அழகிரி சந்திப்பு; ஸ்டாலினுக்கு அடுத்த நெருக்கடி?

மதுரை: மு.க.அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி சென்ற அமைதி பேரணியில் 10,000 பேர் மட்டுமே கலந்து கொண்டது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அவர் அடுத்ததாக எந்த மாதிரியான அரசியல் நகர்வை எடுப்பது என யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. திமுகவில் மீண்டும் இணைய அழகிரி தூது அனுப்பியதாகவும் இருப்பினும் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் துளியும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே அவரது பேரணிக்கு திமுகவினரிடையே வரவேற்பில்லாதபோது  பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும்அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவும், அதற்கு அழகிரி அமைதியாக இருந்ததும் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. எனவே, கருணாநிதிக்கு வெண்கல சிலை வைப்பதாக அவர் எடுத்திருக்கும் முடிவிற்கும் உடன்பிறப்புகளிடையே பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம்.

 

 

இந்நிலையில், இன்று அமைச்சர் செல்லூர் ராஜூவை மு.க.அழகிரி சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி , நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை. செல்லூர் ராஜூ தாயார் இறந்ததற்காக அவரை சந்தித்து துக்கம் விசாரித்தேன் என்று கூறிவிட்டு சென்றார். 

ஆனால், அழகிரியின் இந்த செயல் திமுகவினரை உச்சக்கட்ட கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது . செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்போது அவரை அழகிரி சந்தித்திருப்பது ஸ்டாலினுக்கு எதிராக அவர் வேலை செய்வதையே காட்டுகிறது. அதுமட்டுமின்றி மெரினாவில் இடம் தர மறுத்த ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சரை அழகிரி சந்தித்து கருணாநிதிக்கே அவர் மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் எனவும் உடன்பிறப்புகள் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. பேரணி பிசுபிசுத்து போக, கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கு ஸ்டாலின் மறுக்க உச்சக்கட்ட நெருக்கடியில் அழகிரி இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

எனவே, இனி திமுகவில் நாம் இணைந்தாலும் தக்க மரியாதை இருக்காது, தனி கட்சி ஆரம்பித்தாலும் செல்வாக்கு இருக்காது என நினைத்த அழகிரி மதுரையில் திமுகவிற்கு எதிராக வேலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன் முதற்படிதான் இந்த சந்திப்பு எனவும் கூறப்படுகிறது. செல்லூர் ராஜூவை அழகிரி சந்தித்ததன் மூலம் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். இதனை ஸ்டாலின் சமாளிப்பாரா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஆனாலும், மக்களிடையே செல்வாக்கு இல்லாத அதிமுக கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு ஸ்டாலினுக்கு அழகிரியால் எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்க முடியாது. மதுரையில் வேண்டுமானால் திமுகவிற்கு எதிராக அதிமுகவுடன் இணைந்து கொண்டு அவர் வேலை செய்யலாம். இவ்வாறு அவர் செயல்படுவது ஒன்றும் புதிய கதை இல்லை. அழகிரி எந்த விதமான அஸ்திரத்தை வீசினாலும் அதனை சந்திக்க ஸ்டாலின் எப்போதும் தயாராகவே இருக்கிறார் என உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்