தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட தந்திரம்……நிர்பயா வழக்கு குற்றவாளிகள் டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்…..

 

தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட தந்திரம்……நிர்பயா வழக்கு குற்றவாளிகள் டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்…..

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் அக்சய் சிங் மற்றும் பவன் குமார் குப்தா, தங்களது டெத் வாரண்டுக்கு தடைக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இந்நிலையில் அண்மையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிதாக டெத் வாரண்ட் பிறப்பித்தது. இந்த டெத் வாரண்டை ரத்து செய்யக்கோரி, குற்றவாளிகளில் அக்சங் சிங் மற்றும் பவன் குமார் குப்தா ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அக்சய் சிங் சார்பாக அவரது வக்கீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குடியரசு தலைவர் தனது கருணை மனுவை ரத்து செய்ததில் உண்மையான காரணங்கள் இல்லை. ஆகையால் புதிதாக குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளேன். ஆகையால் மார்ச் 3ம் தேதி தூக்குதண்டனையை நிறைவேற்றக்கோரி பிறப்பித்த டெத் வாரண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

தூக்கு

மற்றொரு குற்றவாளி பவன் குமார் குப்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது curative மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் டெத் வாரண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திரர் ராணா, குற்றவாளிகள் பவன் குமார் குப்தா, ஆகியோரின் மனு தொடர்பாக மார்ச் 2ம் தேதிக்குள் (நாளை) பதில் அளிக்கும்படி  திஹார் சிறை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் இந்த நடவடிக்கைகள் தங்களது தூக்கு தண்டனையை தள்ளி போடும் தந்திரமாகவே என கருதப்படுகிறது.