துரைமுருகன் பேச்சால் குறையாத வைகோ டென்ஷன்… கூலாக்குவாரா ஸ்டாலின்? கவலையில் மதிமுகவினர்

 

துரைமுருகன் பேச்சால் குறையாத வைகோ டென்ஷன்… கூலாக்குவாரா ஸ்டாலின்? கவலையில் மதிமுகவினர்

அந்த பேட்டியை முழுமையாக பார்த்த வைகோ கொந்தளிப்பின் உச்சத்திற்கு போய்விட்டார் என்கின்றனர் விவரமறிந்த மதிமுகவினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என சூளுரைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அதிர்ச்சி அளித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மதிமுகவும், விசிகவும் தற்போது வரை எங்கள் கூட்டணியில் இல்லை. எங்களிடம் காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் உட்பட பழைய கஸ்டமர்கள் இருக்கின்றனர் என்றார்.

அவரது இந்த பேச்சு மதிமுகவினரையும், விசிகவினரையும் கொந்தளிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த மு.க.ஸ்டாலின் திருமாவளவனை தொடர்பு கொண்டு சென்னை வந்ததும் நேரில் சந்திக்கும்படி கூறியதை அடுத்து திருமா நேற்று ஸ்டாலினை சந்தித்தார். அப்போது துரைமுருகன் பேசியது குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும், கூட்டணி குறித்து பெரிதாக ஸ்டாலின் ரியாக்ட் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

thiru

இதற்கிடையே துரைமுருகன் பேசியதை மதிமுக நிர்வாகிகள் முதலில் வைகோவிடம் கூறியதாகவும் ஆனால், ”துரை டைமிங் காமெடி அடித்திருப்பார்” என வைகோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். இதனையடுத்து அந்த பேட்டியை முழுமையாக பார்த்த வைகோ கொந்தளிப்பின் உச்சத்திற்கு போய்விட்டார் என்கின்றனர் விவரமறிந்த மதிமுகவினர். அதனையடுத்துதான் வைகோ செய்தியாளர்களிடம், கூட்டணி குறித்து ஸ்டாலின் சொல்லட்டும் என்றாராம். மேலும், செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு திமுக தலைமையிடமிருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வரும் என எதிர்பார்த்த வைகோவுக்கு பெரும் ஏமாற்றமாம்.

thirumaa

திமுக தலைமை அமைதி காத்ததை அடுத்து, தனக்கு நெருக்கமானவர்களிடம், “துரை பேசியதற்கு திமுக தலைமை எதுவுமே சொல்லாமல் இருக்கிறது. அப்போ அவர் பேசியதை அவங்க தலைமை ரசிக்குதா? என கேட்டு ஆதங்கப்பட்டதாகவும், அதனையடுத்து, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கிறது என்ற அறிவிப்பையும், அந்த அறிவிப்பை திமுக தலைமை நிலையச் செயலாளரான பூச்சிமுருகன் மூலம் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு ஸ்டாலின் கொண்டு போய் சேர்த்ததையும் கேட்ட பிறகுதான் வைகோ சற்று கூலாகினார் எனவும் கூறப்படுகிறது.

vai

அதுமட்டுமின்றி நேற்றைய மாவீரர் தினத்தின் போதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த வைகோவுக்கு துரைமுருகனின் பேச்சும், திமுக தலைமையின் சிறிது நேர அமைதியும் டென்ஷனை ஏற்றியது. அவரை சராசரி நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனவும் மதிமுகவினர் கூறுகின்றனர். மேலும் இன்றைய ஸ்டாலின் – வைகோ சந்திப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கும் டென்ஷனை குறைக்குமா? இல்லை மேற்கொண்டு கூட்டுமா? என்பது எங்களின் பெரிய கவலையாக இருக்கிறது என்கின்றனர் மதிமுகவினர்.