தில்லி ஹோட்டல் தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்

 

தில்லி ஹோட்டல் தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்

தில்லியில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

புதுதில்லி: தில்லியில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தில்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. 4 அடுக்குகளையும், 40-க்கும் மேற்பட்ட அறைகளையும் கொண்ட இந்த ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவத்தின் போது அந்த ஹோட்டலில் சுமார் 60 பேருக்கும் அதிகமாக தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்து முதலில் 4-வது மாடியில் ஏற்பட்டுள்ளது, அதன்பின் தீ மெல்ல மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதுவரை 40க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளோம். ஏறக்குறைய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இனி ஆய்வு செய்யப்படும். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதுகிறோம் என தில்லி தீயணைப்பு படை துணைத் தலைவர் சுனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.