திருவாரூர் மக்களுக்கும் உறுதியானது பொங்கல் பரிசு

 

திருவாரூர் மக்களுக்கும் உறுதியானது பொங்கல் பரிசு

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அம்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசான ரூ 1000 அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அம்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசான ரூ 1000 அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திருவாரூருக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக திமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தன. ஆனால், கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3-ம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார் என கூறி திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் அந்த தொகுதிக்கு மட்டும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ரூ 1000 பின்னர் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அங்கு நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை விலக்கி கொள்ளப்பட்டது. எனவே திருவாரூர் தொகுதி மக்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. மேலும் அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.