திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

டிசம்பர் 9 மற்றும் 12-ந்தேதிகளில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் இறைவன் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். 

இக்கோயிலின் ஸ்தலமரம் வெண்நாவல் மரமாகும். பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம் இக்கோயிலின் ஸ்தல தீர்த்தங்களாகும்.

jambu

 ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்க திருவானைக்காவல் நாவற்காட்டில் சிவலிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து பிரம்ம ஹத்தி தோஷத்தை ராமன் நீங்க பெற்றதாகவும் கூறப்படுகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய 4 சமய குரவர்களும் இத்திருத்தலத்தில் வழிபாடு செய்து உள்ளனர்.

இத்தகைய சிறப்புக்குரிய திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலின் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் டிசம்பர் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

9-ந்தேதி பரிவார மூர்த்திகளுக்கும், 12-ந்தேதி அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி பரிவார மூர்த்தி சன்னதிகளில் ஏற்கனவே பாலாலயம் செய்யப்பட்டது.

jambu

கும்பாபிஷேகத்தின் போது கோபுர உச்சியில் அர்ச்சகர்கள் ஏறி புனித நீர் ஊற்றுவதற்கு வசதியாக சவுக்கு கம்புகளால் சாரங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக யாக குண்டங்கள் பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

முன்னதாக 6-ந்தேதி காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் காவிரி படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

jambu

யாகசாலை பூஜைகள் நடைபெறும் நாட்களில் தினமும் கோயில் வளாகத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.