திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை: கோவையில் பிரபல விடுதிக்கு சீல்!

 

திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை:  கோவையில் பிரபல விடுதிக்கு சீல்!

கோவையில் திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை தருவதாக விளம்பரப்படுத்திய OYO விடுதிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

கோவை: கோவையில் திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை தருவதாக விளம்பரப்படுத்திய ஓயோ விடுதிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்குவதற்கு விடுதிகள் சிறு மற்றும் பேர் நகரங்களில் அதிகமாகி வருகிறது. ஆன்லைன் மூலமாக விடுதிகள் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கோவை நவ இந்தியா பகுதியில் ஓயோ நிறுவனம் சார்பில் சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.அங்கு  திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தங்கினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்  என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த  மாதர் சங்கத்தினர்  மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் புகார் அளித்தனர்.  அப்புகாரில், ‘ஏற்கனவே கோவையில்  குற்றச்சம்பவங்கள்  அதிகரித்து வரும்  நிலையில், ஓயோ  நிறுவனத்தின் கலாச்சார சீரழிவு நடவடிக்கையால்  பாதிப்பு ஏற்படும். உடனடியாகஓயோ  நிறுவனத்தின் சர்வீஸ் அபார்ட்மென்ட்க்கு சீல் வைக்க வேண்டும்’  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த புகாரின் அடிப்படையில், முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த அந்த  விடுதிக்கு சீல்  வைக்க  வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார். மேலும் கோவை நகரில் முறையான அனுமதி இன்றி செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டார்.