திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை 

 

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை 

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவின் இறுதிநாளன இன்று சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதர இருப்பதால் பாதுகாப்பு பணியில் 3000 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சூரபதுமன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். அவன் மிகப் பெரிய யாகங்கள், தவங்கள் ஆகியவற்றைச் செய்து சிவ பெருமானின் நன்மதிப்பைப் பெற்றான். அவனுக்கு வரமளிக்க விரும்பினார் சிவன். எனவே வேண்டும் வரமென்ன என்று கேட்டறிந்தார். ஈசன் உட்பட யாருக்கும் தன்னைக் கொல்ல வல்லமை இருக்கக் கூடாது என்று வேண்டினான் சூரன்.

murugaa

இதனைக் கேட்ட சிவன் தன் பக்தன் ஆயிற்றே, தானே கொல்லவா போகிறோம் என்று எண்ணி அவன் கேட்ட வரத்தை அளித்தார். உடனடியாக முப்பத்துமூன்று கோடி தேவர்களுக்கும் சூரபதுமனைக் கொல்லும் வல்லமை அற்றுப் போனது.

சூரபதுமனுக்கு அகங்காரம் கூடியது. முப்பத்துமூவர் உட்பட முனிவர்களுக்கும் மனிதர்களுக்கும் பொறுக்க முடியாத தொந்தரவுகளைச் செய்யத் தொடங்கினான். காப்பாற்றக் கோரி அனைவரும் சிவனையே சரணடைந்தனர் . அந்த நேரத்தில் சிவனின் நெற்றிகண்ணில் இருந்து  ஆறு தீப்பொறிகள் தோன்றின. 

 

thiru

அப்பொறிகளில் இருந்து உடனடியாக ஆறு தெய்வக் குழந்தைகள் தோன்றின. அத்திருக்குளத்திற்கு புனித நீராட வந்த தேவதைகளான ஆறு கார்த்திகை பெண்கள் அக்குழந்தைகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்து வாரி அணைத்தனர். 

சிறிது காலத்திற்குப் பிறகு சிவ பெருமான் அக்குழந்தைகளை ஒன்றிணைத்தார். இதனால் ஆறு தலைகள் கொண்ட ஆறுமுகன் தோன்றினான். இந்நிலையில் சூரபதுமனது செயல்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தேவர்களை பல்வேறு சித்தரவதைகளை தொடர்ந்து கொடுத்து கொண்டிருந்ததான் இதனை கண்டு வேதனை அடைந்த சக்தி தேவி தனது பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, வேல் ஒன்றை அளித்தார்.

 

murugaa

சூரபதுமனை அழிக்க உருவெடுத்தான் அந்தக் கந்தன். தனது தளபதி வீரபாகுவுடன் களமிறங்கினார் முருக கடவுள். முருகன் சக்தி தந்த வீர வேல் எடுத்து வீசினான் சூரபதுமனை நோக்கி, மாயாவியாய் உருவெடுத்து மாமரமாய் மாறினான் சூரன்.ஒரு மாமரமே அடர்ந்த காடு போல் இருந்தது.

பயமின்றி அம்மரம் நோக்கி வேலை எறிந்தான் வேலன். இரண்டாய் பிளந்த சூரன் மயிலாகவும், சேவலாகவும் மாறி, வேலனைக் கொத்தித் தின்ன வந்தான்.மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு வெற்றி முழக்கமிட்டான் முருகன்.

sooran

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 

தொடர்ந்து திரளான பக்தர்கள் கோயிலில் விரதம் இருந்து வருகின்றனர்.விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது.

murugaa

6-ம் திருநாளான இன்று  விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி,வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைகிறார்.

பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

suran

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார்.

பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட்கொள்கிறார். 

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர்.

suuran

 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் மட்டுமின்றி நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மற்றும் ஊர்க்காவல்படைப் பிரிவினர் உட்பட 3,200 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

sooran

ஏற்கெனவே திருச்செந்தூர் பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள காவல் அதிகாரிகளும் தனியாக வரவழைக்கப்பட உள்ளனர்.சூரசம்ஹாரம் முடிந்ததும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது. 

திருச்செந்தூர் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.