திமுக கூட்டணியை பார்த்து பாஜக பதறுகிறது: திருமாவளவன் பேட்டி

 

திமுக கூட்டணியை பார்த்து பாஜக பதறுகிறது: திருமாவளவன் பேட்டி

திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுப்பெற்று வருகிறது என்ற அச்சத்தில் பாஜக தலைவர்கள் பேசி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுப்பெற்று வருகிறது என்ற அச்சத்தில் பாஜக தலைவர்கள் பேசி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாகப் பேசி சர்ச்சை நெருப்பை பற்றவைத்தார்.

அதற்கு மம்தா, அகிலேஷ் உள்ளிட்ட வடநாட்டுத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஸ்டாலினின் பேச்சை வைத்து தமிழக பாஜக தலைவர்கள் அரசியல் செய்யத் தொடங்கினர். அதேபோல், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே கூட்டத்தில், மோடியை சாடிஸ்ட் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார் ஸ்டாலின். 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுப்பெற்று வருகிறது என்ற பயத்தில் தான் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பேசிவருகின்றனர். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் ஆணவக் கொலைகளையும், சாதிய படுகொலைகளையும் தடுக்கத் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.