திமுக ஆட்சிக்கு வரும்: வைகோ நம்பிக்கை

 

திமுக ஆட்சிக்கு வரும்: வைகோ நம்பிக்கை

பொதுத்தேர்தல் வராமலேயே திமுக ஆட்சிக்கு வரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தூத்துக்குடி: பொதுத்தேர்தல் வராமலேயே திமுக ஆட்சிக்கு வரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மதிமுக சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் வராது. மாநில கட்சிகளின் கூட்டமைப்பு, காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து ஆட்சி அமைக்கும். நம் மாநில உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும். ராமர் கோவில் கட்டுவது என்ற பெயரில் இந்து- முஸ்லீம் மக்களிடையே ரத்தக்களறி ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். கலவரத்தை ஏற்படுத்தி இந்துக்கள் ஓட்டை வாங்க நினைக்கின்றனர்.  

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் திமுக தலைமையிலான அணி தான் வெற்றிபெறும். 20 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் வர வாய்ப்பிருக்கிறது. இதில் 18 தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெறும். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும். 20 தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். பொதுத்தேர்தல் வைக்காமலேயே திமுக ஆட்சிக்கு வந்துவிடும். நான் பொங்கலுக்கு பின்பு தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளேன் என்றார்.