திமுகவில் சேரப்போகிறேனா? தங்க.தமிழ்ச்செல்வன் பொளேர் பதில்

 

திமுகவில் சேரப்போகிறேனா? தங்க.தமிழ்ச்செல்வன் பொளேர் பதில்

அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் சேரப் போவதாக வெளியான தகவலுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை: அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் சேரப் போவதாக வெளியான தகவலுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். 

அதிமுகவில் இருந்து பிரிந்து, அமமுக என்ற தனிக் கட்சியை தினகரன் துவக்கிய போது, அவருக்கு பக்கபலமாக நின்ற அதிமுக சீனியர்களில் தங்க.தமிழ்ச்செல்வனும் ஒருவர். துணை முதல்வரும், தற்போதைய அதிமுகவில் செல்வாக்கு நிரம்பியவராகவும் வலம் வரும் ஓ.பி.எஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்தவரான இவருக்கும், ஓ.பி.எஸ்ஸுக்கும் இடையே ஜெ. காலத்தில் இருந்தே அரசியலில் ஏழாம் பொருத்தம் தான்.

ttv

இருப்பினும் அதிமுகவின் நலனுக்காக இருவரையும், சரி சமமாக கவனித்து வந்தார் ஜெ. இந்த நிலையில், அவரின் மறைவுக்குப் பின்னர், அமமுக என்ற தனிக் கட்சியை தினகரன் துவக்கியதும், அதன் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க. தமிழ்ச்செல்வன் திறம்பட செயல்படத் தொடங்கினார். 

eps ops

ஆனால், ஆரம்பத்தில் தினகரனிடம் இருந்த அரசியல் கவர்ச்சி தற்போது மங்கலானதன் விளைவாக, பொருளாதார சக்தி நிரம்பிய அதிமுக மாஜிக்கள், தினகரனை கழட்டி விட்டு, திமுக பக்கம் வண்டியைத் திருப்ப ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், அவர்கள் அனைவருக்கும் சீனியர் செந்தில் பாலாஜி தான். அதன் தொடர்ச்சியாக, தேனியின் தங்கமும் தற்போது திமுக பக்கம் தாவ இருப்பதாக, சில தினங்களாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. 

thalapathy

இந்த நிலையில், தங்க.தமிழ்ச்செல்வன் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் அதிமுக குடும்பத்தில் இருந்து வந்தவன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் விசுவாசி. அதிமுக 2-ஆக பிரிந்த போது சசிகலா தலைமையை ஏற்று வந்தவன். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் அரசியலில் பயணித்து வருகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் நான் இருப்பதாக கூறினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லையே?

thanga tamilselvan admk

எங்களுக்கு அரசியல் நெருக்கடிகள் பாதிப்புகள் வரும் என தெரிந்துதான் இப்போது இருக்கும் தலைமையை பின் தொடர்ந்து வருகிறோம். எனவே எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு உண்டு. நான் திமுகவில் சேரப் போவதாக சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை” என திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இந்த மறுப்பு காலமெல்லாம் தாக்குப் பிடிக்குமா? அல்லது தினகரன் அணியின் அடுத்த விக்கெட்டாக தங்க.தமிழ்ச்செல்வன் இருப்பாரா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.