திமுகவின் இந்த ஆதரவே கூட்டணிக்கு பதில்: ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி!

 

திமுகவின் இந்த ஆதரவே கூட்டணிக்கு பதில்: ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசியுள்ளார்.

திமுகவுடன் மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணியில் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

துரைமுருகனின் இந்த பேச்சு மதிமுக தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்திருப்பதாக, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தெரிவித்திருந்தார். அதோடு இன்றி, கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை திமுக தலைவர் கூறட்டும் என்றும் வைகோ கூறியிருந்தார்.

இதேபோல் திருமாவளவனும், தோழமை கட்சிகள் கூட்டணியில் இருக்கிறார்கள் என திமுக தலைமை அறிவிக்க வேண்டும் என பேசியிருந்தார். இதனையடுத்து நேற்று மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். இதனால் திமுக – விசிக உறவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு இன்று மாலை வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்துள்ளனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மூன்று கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்த 3 பேரை விடுவித்துள்ளனர். சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே கூட்டணிக்கான விளக்கமும் கூட” என தெரிவித்துள்ளார்.