‘தாலி சங்கிலி அறுப்போம்; லண்டனுக்கு செல்வோம்’ : திருட்டு சகோதரிகளின் மிரள வைக்கும் வாக்குமூலம்!

 

‘தாலி சங்கிலி அறுப்போம்; லண்டனுக்கு செல்வோம்’ : திருட்டு சகோதரிகளின் மிரள வைக்கும் வாக்குமூலம்!

சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக காவல்துறையினரிடம் இவர்கள் சிக்கி உள்ளனர். 

கோவை கோணியம்மன் கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தேர் திருவிழா நடந்தது. இதில் இந்துமதி, பராசக்தி மற்றும்  செல்வி ஆகிய மூன்று சகோதரிகள் சேர்ந்து கோயிலுக்கு வந்த பெண்களின் நகைகளை திருடியுள்ளனர். அப்போது சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக காவல்துறையினரிடம் இவர்கள் சிக்கி உள்ளனர். 

ttn

இதுகுறித்து அவர்கள்  அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது, சகோதரிகள் மூவரும் சேர்ந்து பல கோயில் திருவிழாக்களில் கைவரிசை காட்டியுள்ளனர். இதில் கிடைத்த வருமானத்தில் சென்னை திருவான்மியூரில் சொந்தமாக வீடே கட்டியுள்ள அளவிற்கு இவர்களின் தொழில் அமோகமாக இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் பராசக்தி இலங்கையிலும், செல்வி கணவருடன் லண்டனுக்கும், இந்துமதி கணவருடன் கேரள மாநிலத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.  திருமணமாகி செட்டில் ஆனபோதிலும் திருடும் பழக்கம் மட்டும் இன்னும் அவர்களிடமிருந்து செல்லவில்லை. 

ttn

இதனால் தொடர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்ட இவர்களுக்கு இந்துமதியின் கணவர் பாண்டியராஜன் தான் பிளான் போட்டு கொடுப்பாராம். அதாவது ஆன்லைனில் எந்தெந்த ஊர்களில் திருவிழா என்பதை அறிந்து விஷயத்தை சொல்ல  சுற்றுலா விசாவில் விமானத்தை பிடித்து இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்களாம். பின்னர் இந்துமதியும் பாண்டியராஜனும் வர நால்வரும் கோவிலின் அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி நோட்டமிட்டு பின்னர் கைவரிசை காட்ட ஆரம்பித்து விடுவார்களாம்.

ttn

 ஒரு கோயில் திருழாவில் மட்டும் 100 சவரன் நகைகளை அபேஸ் செய்யும் இந்த கில்லாடி சகோதரிகள் அதை பாண்டியராஜனிடம் கொடுத்து விற்று பங்கை பிரித்துக்கொண்டு மீண்டும் ஊர்களுக்கு சென்றுவிடுவார்களாம். கடந்த மாதம் பழனியில் தொடங்கி திருச்செந்தூரில் திருடி விட்டு கோவைக்கு வந்த போது  தான் இவர்கள் சிக்கியுள்ளார்கள். அவர்களிடமிருந்து 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் 15 சவரன் நகைகளுடன் பாண்டியராஜன் தப்பி சென்று விட்டார்.

இதை தொடர்ந்து  திருட்டு சகோதரிகள் மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய பாண்டியராஜனை  தேடி வருகிறார்கள்.