தாய்ப்பால் கொடுக்க பிடிக்காததால் 2 மாத குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு சம்பவம்!

 

தாய்ப்பால் கொடுக்க பிடிக்காததால் 2 மாத குழந்தையை கொன்ற தாய்:  பரபரப்பு சம்பவம்!

வேளச்சேரியில்  குழந்தை காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக, தாய்ப்பால் ஊட்ட பிடிக்காததால் குழந்தையை ஏரியில் வீசியதாக தாய் உமா வாக்கு மூலம் அளித்துள்ளார். 

சென்னை: வேளச்சேரியில்  குழந்தை காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக, தாய்ப்பால் ஊட்ட பிடிக்காததால் குழந்தையை ஏரியில் வீசியதாக தாய் உமா வாக்கு மூலம் அளித்துள்ளார். 

சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவில் 5-வது தெருவில் வெங்கண்ணா-உமா என்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி வசித்து வருகின்றனர். வெங்கண்ணா வேளச்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. வீட்டில், கணவன் மனைவி, அவர்களுடைய குழந்தை, உமாவின் தாய், தங்கை என ஐந்து பேர் வசித்து வருகின்றனர்.

வியாழன் இரவு புழுக்கம் காரணமாக காற்றோட்டமாக இருக்கட்டும் என்று வீட்டின் கதவைத் திறந்து வைத்தபடி அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டிற்குள் புகுந்து, இரண்டு மாத குழந்தையைக் கடத்தி சென்றதாக கூறப்பட்டது.

இது குறித்து வேளச்சேரி காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.இப்புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த போலீசாருக்கு குழந்தையின் தாய் உமா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் உமாவிடம் தொடர் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதில், குழந்தைக்கு தாய் பால் ஊட்ட பிடிக்கவில்லை.அதனால் குழந்தையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஏரியில் வீசியதாக உமா வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

உமா அளித்துள்ள வாக்குமூலத்தின் படி, குழந்தையின் உடலை ஏரியிலிருந்து மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உமா மீது வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.