தவறுதலாக முதல்வர் என பதவி பிரமாணம் செய்த அமைச்சர்…. கட்டிப்பிடித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா…

 

தவறுதலாக முதல்வர் என பதவி பிரமாணம் செய்த அமைச்சர்…. கட்டிப்பிடித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா…

கர்நாடகாவில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், பா.ஜ.வின் மூத்த தலைவர் மது சாமி பதவி பிரமாணம் செய்கையில் அமைச்சர் என்று சொல்வதற்கு பதிலாக முதல் அமைச்சர் என கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலையில், கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளின்  கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, பா.ஜ. ஆட்சியை அமைத்தது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போதும் மற்ற அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. கர்நாடகாவில் வெள்ளம், சுஷ்மா சுவராஜ் இறப்பு என பல்வேறு காரணங்களால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அமைச்சர்கள் இல்லாமல் எடியூரப்பா மட்டுமே நிர்வாகம் செய்து வந்தார்.

எடியூரப்பா

இந்நிலையில், தனது அமைச்சரவையில் இடம் பெறும் 17 பேர் கொண்ட பட்டியலை முதல்வர் எடியூரப்பா அம்மாநில கவர்னர் வாஜூபாய் வாலாவுக்கு அனுப்பினார். அந்த பட்டியலில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, கே.எஸ். ஈஸ்வரப்பா, அசோகா போன்ற அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சமீபத்தில் பா.ஜ.வுக்கு தாவிய ஹெச். நாகேஷ்  உள்ளிட்டோர் பெயரும் இடம் பெற்று இருந்தது.

பா.ஜ. அமைச்சர் மது சாமி

கர்நாடக கவர்னர் வாஜூபாய்  வாலா நேற்று காலை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 17 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் ஒரு சுவாரஸ்மான சம்பவம் நடந்தது. பா.ஜ.வின் மது சாமி பதவி பிரமாணம் செய்யும் போது அமைச்சர் என்று சொல்வதற்கு பதில் தவறுதலாக  முதல் அமைச்சர் என்று கூறிவிட்டார். பின் தவறை உணர்ந்து உடனடியாக அமைச்சர் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் எடியூரப்பாவும் சிரித்தார். பதவியேற்ற பிறகு மது சாமி தன் அருகே வந்த போது அவரை எடியூரப்பா கட்டி பிடித்தார்.