தலித்துகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: போட்டுத்தாக்கும் பாஜக எம்.பி

 

தலித்துகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: போட்டுத்தாக்கும் பாஜக எம்.பி

பாஜக தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறது என அக்கட்சியிலிருந்து விலகிய எம்.பி சாவித்திரி பாய் பூலே அதிரடியாக கூறியுள்ளார்.

லக்னோ: பாஜக தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறது என அக்கட்சியிலிருந்து விலகிய எம்.பி சாவித்திரி பாய் பூலே அதிரடியாக கூறியுள்ளார்.

பாஜக கட்சி தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறது என்ற பேச்சு பரவலாக இருந்துவருகிறது. மேலும் கட்சி தலைவர்களே கட்சியில் இருக்கும் பிற சமுதாயத்தவரை குறிப்பாக தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஓரங்கட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவி வருகிறது. ஆனால் அதனை அவர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று பாஜக எம்.பி சாவித்திரி பாய் பூலே அக்கட்சியிலிருந்து விலகினார். தாம் கட்சியிலிருந்து ஏன் வெளியேறினேன் என அவர் கூறிய தகவல்கள் உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் பேசுகையில், இன்றிலிருந்து பாஜகவுக்காக நான் எதுவும் செய்யப்போவதில்லை. நான் தலித்தாக இருப்பதால் பாஜகவில் என்னுடைய குரல் நிராகரிக்கப்பட்டது. அங்கே, தலித்துகளுக்கு எதிராகவும்  அவர்களது உரிமைகளுக்கு எதிராகவும் பெரும் சதி நடைபெறுகிறது. தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மெதுவாக நீக்கப்படும். 

அரசியல் சாசனத்துக்காக நான் தொடர்ச்சியாக போராடுவேன். ஜனவரி 23-ம் தேதி லக்னோவில் மிகப்பெரும் பேரணி நடத்தப்போகிறேன். யோகி ஆதித்யநாத் ஹனுமனை தலித் என்று குறிப்பிடுகிறார். ஹனுமன் தலித்தாக இருந்ததால்தான் ராமன், அவரை குரங்காகப் படைத்தார். யோகி ஆதித்யநாத்துக்கு, உண்மையில் தலித் மக்களைப் பிடித்திருந்தால், அவர் ஹனுமனை விரும்புவதை விட தலித் மக்களை விரும்ப வேண்டும். ஆதித்யநாத் எப்போதாவது தலித் மக்களைத் தொட்டிருக்கிறாரா?

அவர், தலித் மக்களின் வீடுகளில் உணவு உண்பார். ஆனால், சமைத்தவர் தலித்தாக இருந்தது அல்ல. அவர்கள், தலித் மக்களின் வாக்கை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். தற்போது தலித், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள் அவர்களின் செயல்பாடுகளை புரிந்துள்ளனர். யோகி ஆதித்யநாத் குறிப்பிடுவதைப் போல ஹனுமன் தலித்தாக இருந்தால், நாடு முழுவதுமுள்ள ஹனுமன் கோயில்களில் பூசாரிகளாக தலித்துகளை நிர்ணயிக்க வேண்டும்.  பக்தியின் காரணமாக ராமருக்கு தேவையான எல்லாவற்றையும் ஹனுமார் செய்துள்ளபோது, அவர் மனிதராக மாற்றப்பட்டிருக்கவேண்டும். அந்த நேரத்திலேயே தலித்தாக இருந்ததால் ஹனுமார் அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்றார்.