தமிழர்களை அவமதித்த ரஜினி வில்லனின் ‘தாக்கரே’ படம்; ‘பேட்ட’ ரிலீஸில் சிக்கல்?

 

தமிழர்களை அவமதித்த ரஜினி வில்லனின் ‘தாக்கரே’ படம்; ‘பேட்ட’ ரிலீஸில் சிக்கல்?

தமிழர்களை அவமதிக்கும் விதமாக ‘பேட்ட’ வில்லன் நவாசுதீன் சித்திக் ‘தாக்கரே’ படத்தில் பேசிய வசனத்தால் ‘பேட்ட’ படத்திற்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

சென்னை: தமிழர்களை அவமதிக்கும் விதமாக ‘பேட்ட’ வில்லன் நவாசுதீன் சித்திக் ‘தாக்கரே’ படத்தில் பேசிய வசனத்தால் ‘பேட்ட’ படத்திற்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நவாசுதீன் முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில், இவர் பாலிவுட்டில் நடித்த ‘தாக்கரே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூனிஸ்டான பால் தாக்கரே, சிவசேனா என்ற அமைப்பை தொடங்கி மராத்தியர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை நடத்தினார். நாளடைவில் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறியது. பால் தாக்கரேவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எழுதி தயாரித்துள்ளார். தாக்கரேவாக நவாசுதீன் சித்திக் நடிக்கும் இப்படத்தை அபிஜித் பன்சே இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டிரைலரில், அயோத்தி பிரச்னை, தென்னிந்தியர்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதில் ஒரு காட்சியில் மேடையில் பேசும் தாக்கரே,‘தென்னிந்தியர்கள் நமது அனைத்து வேலை வாய்ப்புகளையும் சுரண்டிக் கொண்டனர். அவர்களின் லுங்கியை அவிழ்த்துவிரட்டியடிப்போம்’ என கடுமையான வார்த்தைகள் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு நடிகர் சித்தார்த் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தென்னிந்தியர்கள் மீது வெறுப்பைக் கொட்டும் வகையில் வசனங்கள் உள்ளன. இதுபோன்ற வெறுப்புணர்வு பரப்புவதை தடுக்க வேண்டும் என நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

‘தாக்கரே’ டிரைலரில் நவாசுதீன் பேசியுள்ள சர்ச்சை வசனங்களால், ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்படும் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.