தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. ஆசிரியர்கள் போராட்டம், கஜா புயல் பாதிப்பு, விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

2019-20-ஆம் நிதிஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20-ஆம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும். வரும் நிதி ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு. பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.621.59 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவும், விமர்சனங்களும் கலவையாக வந்துள்ளன. ஏழை எளிய மக்களுக்கு பயன்படாத உதவாக்கரை பட்ஜெட் என தமிழக பட்ஜெட்டை குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ததையடுத்து, பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், சபாநாயகர் தனபால் தலைமையில் அவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அதில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 11-ம் தேதி (இன்று) முதல் 14-ம் தேதி வரை 4 நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான பொது விவாதம் 3 நாட்கள் நடைபெறும். தொடர்ந்து வருகிற 14-ம் தேதி நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. வருகிற 13-ம் தேதி வரை நடைபெறும் விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவார்கள். துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம் 14-ம் தேதியன்று விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார். ஆசிரியர்கள் போராட்டம், கஜா புயல் பாதிப்பு, விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.