தமிழக காவல்துறை ஐ.ஜி., மீதான பாலியல் வழக்கு: அறிக்கை அளிக்க பிரதமர் அலுவலகம் உத்தரவு

 

தமிழக காவல்துறை ஐ.ஜி., மீதான பாலியல் வழக்கு: அறிக்கை அளிக்க பிரதமர் அலுவலகம் உத்தரவு

காவல்துறை ஐ.ஜி., மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நிலவர அறிக்கையை அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை: காவல்துறை ஐ.ஜி., மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நிலவர அறிக்கையை அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறையின், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது, பெண் எஸ்பி சமீபத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். அதில், தினமும் ஆபாச வீடியோக்களை அனுப்பி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும் வற்புறுத்தியதாகவும், தன்னைக் கட்டிப் பிடிக்க முயற்சித்ததாகவும், பல வழிகளில் தொடர்ந்து பாலியல் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, டிஜிபி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தமிழக காவல்துறையில் செயலற்று கிடந்த விஷாகா குழு மீதும் புதுப்பிக்கப்பட்டது. குற்றவியல் ஆவண காப்பகத்தின் இயக்குநர் ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விஷாகா குழு, ஐ.ஜி., மீதான பெண் எஸ்.பி., அளித்த பாலியல் புகார் மீது விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி மீது, கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரிக்க தமிழக காவல்துறைக்கு விஷாகா குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், ஐ.ஜி., மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நிலவர அறிக்கையை அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து, தகவல்களை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.  தேசிய மகளிர் ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும், மீ டூ விவகாரம், பூதாகரமாகியுள்ள நிலையில், பெண் எஸ்.பி. மீதான பாலியல் புகார் பிரதமர் அலுவலகம் வரையி சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.