தமிழகத்தில் 8,000 கோயில்கள் அழியும் நிலையில் இருக்கிறது: ஹெச்.ராஜா

 

தமிழகத்தில் 8,000 கோயில்கள் அழியும் நிலையில் இருக்கிறது: ஹெச்.ராஜா

தமிழகத்தில் மொத்தம் 8,000 கோயில்கள் அழியும் நிலையில் இருக்கிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

திருவண்ணாமலை: தமிழகத்தில் மொத்தம் 8,000 கோயில்கள் அழியும் நிலையில் இருக்கிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் அழியும் நிலையில் இருப்பதாக பாஜகவினர் உட்பட இந்து அமைப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் அதனை காப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த செங்கட்டான்குண்டில் நடந்த திருமண விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். மேலும் சிதிலமடைந்த திருநீரணிந்தீஸ்வரர் கோவிலை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

செங்கட்டான்குண்டில் கிராமத்தில் உள்ள திருநீரணிந்தீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து 45 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இந்துகளின் வழிபாட்டு தலங்களை அழிக்கும் துறையாக இருந்து வருகிறது. கோவிலில் 23 பஞ்சலோக சிலைகள் இருந்தது. அதில் 6 சிலைகள் திருட்டு போனது. மீதமுள்ள 17 சிலைகளை ஊர் பொதுமக்களே பாதுகாத்து வருகின்றனர்.

1989-ம் ஆண்டில் திருவண்ணாமலையில் உள்ள சிலை பாதுகாப்பு காப்பகத்தில் சிலைகளை வைக்க அரசு முயற்சித்தபோது அதனை எடுத்து செல்ல ஊர்மக்கள் அனுமதிக்கவில்லை. இக்கோவிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தின் குத்தகை வருவாயை ஆண்டுதோறும் வசூலிக்கும் இந்து சமய அறநிலையதுறையினர், அதில் ஒரு பைசா கூட விளக்கேற்ற செலவு செய்யவில்லை. இக்கோவிலை போல ஊழல் நிறைந்த இந்து சமய அறநிலையத்துறையால் தமிழகத்தில் 8 ஆயிரம் கோவில்கள் அழியும் நிலையில் உள்ளது. கோவில் அழிந்து போக காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.