தமிழகத்தில் விடுபட்ட 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

தமிழகத்தில் விடுபட்ட 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பூந்தமல்லி (தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), நிலக்கோட்டை (தனி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை (தனி), ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), சாத்தூர், பரமக்குடி (தனி), விளாத்திக்குளம் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

18 mlas

ஆனால், இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அதேசமயம், திருப்பரங்குன்றம் வழக்கை திமுக நிர்வாகி சரவணன் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அத்துடன் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது எனவும், சரவணனை வெற்றி வேட்பாளராக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. மேலும், ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை கிருஷ்ணசாமி திரும்பப் பெற்றுள்ளதால் அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. எனவே, வழக்குகளை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருக்கக் கூடாது எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

supreme court

இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, மூன்று தொகுதிகளுக்கும் இப்போதே தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்றதுடன், உரிய நேரத்தில் தேர்தலை நடத்துங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. இதனிடையே, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கனகராஜ் காலமானதால் அந்த தொகுதியும் காலியானது.

இந்நிலையில், தமிழகத்தில் விடுபட்ட சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 29-ம் தேதி, மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி மே 2-ம் தேதியாகும். வாக்குப்பதிவு மே 19-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ம் தேதியும் நடைபெறுகிறது.

இதையும் வாசிங்க

நதிகளை இணைத்துவிட்டால் நிம்மதியா கண்ண மூடிடுவேன்; ரஜினியின் நீர் அரசியல்?!..