தமிழகத்தில் முதன்முறையாக அமைகிறது இரண்டு அடுக்கு பேருந்து நிலையம்

 

தமிழகத்தில் முதன்முறையாக அமைகிறது இரண்டு அடுக்கு பேருந்து நிலையம்

தமிழகத்தில் முதன்முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் சென்னையில் அமைய இருக்கிறது.

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் சென்னையில் அமைய இருக்கிறது.

சென்னையின் பிரதான பேருந்து நிலையமாக இருந்து வருவது கோயம்பேடு பேருந்து நிலையம். வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள், சென்னை புறநகர் பேருந்துகள் என அங்கு ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்படுவது வழக்கம். இதனால் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் தமிழகத்திலேயே முதன்முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி மாதவரம் ரவுண்டானா அருகில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில், தரை தளத்தில் 51 பேருந்துகளையும், மேல்தளத்தில் 50 பேருந்துகளையும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

மேலும் 9 மாநகரப் பேருந்துகளுக்கு இந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட இருக்கின்றன.

கூடுதல் வசதியாக இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்கும் இடம்,  தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, நடத்துனர் ஓட்டுநர் தங்கும் வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே முதல்முறையாக கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தை, வரும் 10-ம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.