தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – மக்கள் அச்சம்

 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – மக்கள் அச்சம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கொரோனா தொற்று உள்ள நேரத்தில் இப்படி மழை பெய்வதால் பாதிப்பு வருமா என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒரு சில வாரங்களாக வெளுத்து வாங்கிய வெயிலின் தீவிரம் இரண்டு நாட்களாக குறைந்துள்ளது. கோவை, சேலம், தேனி என தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா காற்றில் பரவாது என்றாலும், நீர்த் திவலைகள் வழியாகப் பரவும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில் மழை பெய்வதால் பாதிப்பு அதிகரிக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மழையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.