தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை; தடையை மீறுவோருக்கு அதிக அளவில் அபராதம்

 

தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை; தடையை மீறுவோருக்கு அதிக அளவில் அபராதம்

தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் போது, 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம். நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுவதாக கூறி,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தமிழக முழுவதும் பத்தாயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் தடையை மீறினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் தெரிகிறது. சட்டத்தை மீறினால், நாளொன்றுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.

இதனிடையே, இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில், தடையை மீறுவோர் மீது அபராதத்தை தாண்டி வேறு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.