தமிழகத்தில் கழக ஆட்சி தான் மேலோங்கி இருக்கும்: முதல்வர் பழனிசாமி

 

தமிழகத்தில் கழக ஆட்சி தான் மேலோங்கி இருக்கும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

கோவை: தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் பாஜக-வின் கைக்குள் இருந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரியணைகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சி இல்லாத அகண்ட பாரதம், நாடு முழுவதும் காவிக் கொடி பறக்கும் என கூறி வரும் பாஜக-விற்கு இந்த தேர்தல் முடிவுகள் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளன. தமிழகத்திலும் கழகங்கள் இல்ல தமிழகம் என்ற முழக்கங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி,  தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும் என்றார்.

மேலும், தேர்தல் முடிவுகளில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்த முதல்வர், தேர்தல் பொறுத்தவரை மாநிலத்தில் ஒரு முடிவும், மத்தியில் ஒரு முடிவும் ஏற்படும் என்றார்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் கர்ந்தாடகா மதித்து நடந்த வரலாறு கிடையாது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி நீரை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. கர்நாடகா அணை கட்டும் போது ஒவ்வொரு முறையும் தமிழகம் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதித்தது கிடையாது என்றும் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.